வெளித்தோற்றத்தின்படி நியாயந்தீர்ப்பதைப் பவுல் கடிந்துகொள்ளுதல்
வெளித்தோற்றத்தின்படி நியாயந்தீர்ப்பதற்காகப் பவுல் பொய்ப்போதகரைக் கண்டிக்கிறார். தாமும் கிறிஸ்துவின் ஊழியராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்கிறார்; அவர்களைக் கட்டியெழுப்பத் தமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார். தமது எதிரியின் அவதூறான கூற்றுகளை மீண்டும் நையாண்டியுடன் குறிப்பிடுகிறார். தாம் தொலைவில் இருந்தபோது, குடும்ப உறவினருடன் தகாத பாலுறவில் ஈடுபட்ட மனிதனைத் தண்டித்ததில் தமது வல்லமையின் விளைவுகள் ஏற்கெனவே காணப்பட்டதால், தாம் நேரில் இருக்கும்போதும் அது அவ்வளவு வலிமையுடையதாகவே இருக்கும் என்று முடிவு செய்யும்படி அவரை அழைக்கிறார்.
கி.பி. 58
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும். 8 மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. 9 நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே. 11 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.
தேவன் நிர்ணயிக்கும் வரம்புகளுக்குள் பெருமைபாராட்டுதல்
தமது நையாண்டியைத் தொடர்ந்து, தன்னைத்தானே அளவுகோலாகக் கொண்டு, கொரிந்தில் தான் செய்தவற்றிற்காகத் தன்னையே புகழ்ந்துகொள்ளும் பொய்ப்போதகருடன் தம்மை ஒப்பிடத் துணிவில்லை என்று பவுல் கூறுகிறார். மாறாக, தேவன் தமக்கு நிர்ணயித்த வரம்புகளுக்குள் மட்டுமே மகிழ விரும்புகிறார்; அந்த வரம்புகளுக்குக் கீழ்ப்படிந்தே அவர் இப்போது கொரிந்தியர்களை வந்தடைந்திருக்கிறார். பொய்ப்போதகரைப்போல மற்றவர்களின் உழைப்பைக் குறித்துப் பெருமைபாராட்ட மறுத்து, இதுவரை நற்செய்தி அறிவிக்கப்படாத நாடுகளில் அதை அறிவிக்க நம்பிக்கையுடன் இருக்கிறார். ஏனெனில், மற்றவர்களின் வேலையைக் குறித்துப் பெருமைபாராட்டுகிறவன் அல்ல, தேவனுடைய மகிமைக்காகப் பிரசங்கித்து, ஆவியின் வரங்களால் வெளிப்படும் தேவனுடைய பாராட்டைப் பெறுகிறவனே அங்கீகரிக்கப்படுகிறான்.
12 எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை. 13 நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 14 உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே. 15 எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். 16 ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம். 17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும். 18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
கொரிந்தியர்கள் வழிதவறச் செய்யப்படுவதாகப் பவுல் அஞ்சுதல்
தம்மைத்தாமே பாராட்டிக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பவுல், இச்சந்தர்ப்பத்தில் அதைப் பொறுத்துக்கொள்ளும்படி கொரிந்தியர்களை வேண்டுகிறார். ஏனெனில், தாம் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தி, நியாயத்தீர்ப்பின்போது அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட கணவரிடம் கற்புள்ள கன்னிகையாக ஒப்படைக்க ஏங்கியவர்களைப் பொய்ப்போதகர் அவரிடமிருந்து விலகச் செய்துவிட்டதாக அவர் அஞ்சுகிறார். அவர்கள் அப்போஸ்தலன் என்று கூறிக்கொள்பவன் வேறொரு இரட்சகரையோ நற்செய்தியையோ அவர்களுக்குப் பிரசங்கித்தால், அல்லது வேறொரு ஆவியை அவர்களுக்குக் கொடுத்தால், அவனுடைய உரிமைக்கோரல்களை அவர்கள் பொறுத்துக்கொள்ளலாம் என்று வாதிடுகிறார். கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் முதன்மையானவர்களுக்குத் தாம் சமமானவர் என்றும், பேச்சில் திறமையற்றவராயிருந்தாலும் நற்செய்தி ஊழியருக்குத் தேவையான அறிவில் தமக்குக் குறைவில்லை என்பதை அவர்களுக்குக் காட்டியிருப்பதாகவும் உறுதிப்படுத்துகிறார்.
1 என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 3 ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். 4 எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே. 5 மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன். 6 நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே.
பவுல் கொரிந்திலிருந்து ஊதியம் பெறாததன் காரணம்
கொரிந்தியர்களிடமிருந்து பொருளுதவியை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தைப் பவுல் விளக்குகிறார். தமது எதிரிகள் கூறியபடி அன்பின்மையால் அல்ல, அவர்கள்மீது கொண்ட அன்பினாலேயே அவ்வாறு செய்ததாகவும், உலக ஆதாயத்திற்காகப் பவுல் உழைத்தார் என்று பொய்ப்போதகர் கூறுவதற்கு இடமளிக்காதிருக்கவே அவ்வாறு செய்ததாகவும் அறிவிக்கிறார். இரகசியமாகக் கொடைகளைப் பெற்றுவந்த பொய்ப்போதகர் அப்பழக்கத்தைக் கைவிட்டுத் தமது முன்மாதிரியைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதும் அதன் நோக்கமாக இருந்தது. சாத்தானே ஒளியின் தூதனுடைய தோற்றத்தை எடுத்துக்கொள்வதால், சாத்தானின் ஊழியர்கள் கிறிஸ்துவின் ஊழியர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் என்ற பதவியைத் தங்களுக்கே எடுத்துக்கொள்வது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ? 8 உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். 9 நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன். 10 அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். 11 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார். 12 மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். 14 அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. 15 எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.
பவுல் தமது உழைப்புகளையும் துன்பங்களையும் குறித்துப் பெருமைபாராட்டுதல்
தமது பெருமைபாராட்டுதலைப் பொறுத்துக்கொள்ளும்படி பவுல் மீண்டும் கொரிந்தியர்களை வேண்டுகிறார். அப்போஸ்தலர்களே அல்லாதவர்கள் மாம்சத்தில் பெருமைபாராட்டுவதால், அப்போஸ்தலராகத் தமது தகுதியைக் காத்துக்கொள்ளத் தாமும் தமது விருத்தசேதனத்தையும் யூத வம்சத்தையும் பற்றிப் பெருமைபாராட்ட வேண்டும். மற்றவர்களின் ஆதிக்கப் போக்கிற்குக் கொரிந்தியர்கள் அளவுக்கு மீறிய பொறுமையுடன் அடிபணிந்ததைச் சுட்டிக்காட்டி, பொய்ப்போதகர் அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தை விவரிக்கிறார். தாம் தாழ்ந்த பிறப்புடையவர், பலவீனமானவர், அப்போஸ்தலராக இருக்கத் தகுதியற்றவர் என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக, பெருமைபாராட்ட யாருக்காவது காரணமிருந்தால் தமக்கும் உண்டு என்று உறுதிப்படுத்துகிறார். இவ்விஷயங்களில் தம்மைப் பொய்ப்போதகருடன் ஒப்பிட்டு, தமது உழைப்புகளையும் துன்பங்களையும், சபைகள் மற்றும் தனிநபர்கள்மீது தமக்குள்ள மிகுந்த அக்கறையையும் சுட்டிக்காட்டித் தமது மேன்மையை வெளிப்படுத்துகிறார். பலவீனமானவர்களுடன் அனுதாபப்பட்டு, வழிதவறச் செய்யப்பட்டவர்களை மீட்டுக்கொள்ள வைராக்கியமாக உழைக்கிறார். தேவனுடைய வல்லமை வெளிப்படும்படி தமது பலவீனத்தைக் குறித்தும், குறிப்பாகத் தமஸ்குவிலிருந்து தப்பியதைக் குறித்தும் பெருமைபாராட்டுகிறார்.
16 பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள். 17 இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். 18 அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன். 19 நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே. 20 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. 21 நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன். 22 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான். 23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். 24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; 25 மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். 26 அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; 27 பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 28 இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. 29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ? 30 நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். 31 என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். 32 தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்; 33 அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.