யூதேயாவுக்காகத் தாராளமாகக் கொடுக்கும்படி பவுல் வலியுறுத்துகிறார்
மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்த மக்கெதோனியாவிலுள்ள சபைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, யூதேயாவிலுள்ள கிறிஸ்தவச் சகோதரர்களின் துயர்தீர்க்கத் தாராளமாகக் கொடுக்கும்படி பவுல் கொரிந்தியர்களை வலியுறுத்துகிறார். இரக்கச் செயல்கள் மனமுவந்து செய்யப்பட வேண்டியவை என்பதால், இதைக் கட்டளையாகக் கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார்; ஆயினும், கிறிஸ்துவின் முன்மாதிரியாலும் அன்பாலும் அவர்கள் இச்செயல்களில் பெருகுவார்கள் என்று நம்புகிறார். கொடையின் அளவைவிடக் கொடுப்பவரின் மனவிருப்பத்தையே தேவன் மதிப்பதால், ஏற்கெனவே தொடங்கிய காணிக்கை சேகரிப்புகளைத் தங்கள் வசதிக்கேற்பத் தாமதமின்றி முடிக்கும்படி அவர்களை அழைக்கிறார். அவர்கள் கொடுப்பது யூதேயாவிலுள்ள ஏழைச் சகோதரர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; அச்சகோதரர்களும் தங்கள் முறை வரும்போது கொரிந்தியர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடும்.
கி.பி. 58
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். 2 அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள். 3 மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். 4 தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். 5 மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். 6 எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம். 7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். 8 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன். 9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே. 10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும். 11 எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 12 ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். 13 மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். 14 எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, 15 ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
தீத்துவும் இரு சகோதரர்களும் கொரிந்துக்கு அனுப்பப்படுதல்
தமக்கு அவர்கள்மீது இருக்கும் அக்கறையைப் போலவே தீத்துவுக்கும் அக்கறை உண்டாக்கியதற்காகப் பவுல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார். தீத்துவின் ஆர்வமே இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்ல அவரைத் தூண்டியது. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெருந்தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதைக் குறித்து எந்தக் குற்றச்சந்தேகமும் எழாதபடி, அவர்களுடைய கொடைகள் கையாளப்பட்ட விதத்திற்குச் சாட்சியாக மக்கெதோனியச் சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகுந்த நற்பெயருள்ள ஒரு சகோதரரைத் தீத்துவுடன் அனுப்புவதாகப் பவுல் அவர்களுக்குக் கூறுகிறார். அவர்களுடைய நல்ல மனப்பாங்கைப் பற்றிய செய்தியால் இச்சந்தர்ப்பத்தில் வழக்கத்தைவிட மிகுந்த ஆர்வமுள்ள மற்றொரு உடன் ஊழியரும் அனுப்பப்படுகிறார். பிரிவினைக் குழுவினரின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்; மேலும், இந்தத் தூதர்களுக்கும் சபைகளுக்கும் தங்கள் அன்பையும் தங்கள்மீது பவுல் வைத்துள்ள நம்பிக்கையையும் மெய்ப்பித்துக் காட்டும்படி வலியுறுத்துகிறார்.
16 அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். 17 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான். 18 நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம். 19 அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். 20 எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து, 21 கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம். 22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம். 23 தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும். 24 எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
காணிக்கையை ஆயத்தப்படுத்தத் தீத்து முன்னதாக அனுப்பப்படுதல்
ஒரு வருடத்திற்கு முன்பு கொரிந்தியர்கள் காட்டிய மனவிருப்பத்தைப் பற்றி மக்கெதோனியர்களிடம் தாம் பெருமையாகப் பேசியதைப் பவுல் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டுகிறார். அதன்பின், இவ்விஷயத்தில் அவர்கள் அக்கறையின்றி இருந்ததைத் தீத்துவிடமிருந்து அறிந்ததால், தாம் வருவதற்கு முன் காணிக்கைகளை ஆயத்தப்படுத்தத் தீத்துவையும் அவருடைய தோழர்களையும் அனுப்புகிறார். அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசியதற்காகத் தாம் வெட்கப்படாதிருக்கவும், அவர்கள் கொடுப்பது பேராசையுள்ளவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பெறப்பட்டதுபோல் இல்லாமல் மனமுவந்து கொடுக்கப்பட்டதாக இருக்கவும் இவ்வாறு செய்கிறார்.
1 பரிசுத்தவான்களின் ஊழியத்திற்கு செய்யவேண்டிய உதவிகளைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. 2 உங்களுடைய மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவில் உள்ளவர்கள் ஒருவருடமாக ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, நான் மக்கெதோனியரிடம் சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்களுடைய வாஞ்சை அநேகரை செயலில் ஈடுபடவைத்தது. 3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன். 4 மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும். 5 ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.
தாராளமாக விதையுங்கள், மகிழ்ச்சியுடன் கொடுங்கள்
இங்கு நாம் செய்யும் செயல்களுக்கேற்ப மறுமையில் நமக்குப் பலன் கிடைக்கும் என்பதால், தாராளமாக இருக்கும்படி பவுல் கொரிந்தியர்களை வலியுறுத்துகிறார். மகிழ்ச்சியுடன் கொடுக்கும்படி அவர்களை வலியுறுத்துகிறார். அவர்களுடைய உழைப்பை ஆசீர்வதித்து, அவர்களுடைய சொந்தத் தேவைகளுக்கும் தருமச் செயல்களுக்கும் போதுமான இவ்வுலகப் பொருட்களை அவர்களுக்கு வழங்கத் தேவன் வல்லவராயிருக்கிறார். உதவி பெறுகிறவர்கள் மகிழ்ந்து, தேவனுக்கு நன்றி செலுத்தி, கொடுத்தவர்களுக்காக ஜெபிக்கிறார்கள்.
6 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். 7 அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். 8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். 9 வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். 10 விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். 11 நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும். 12 இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும். 13 அவர்கள் இந்த தர்ம உதவிகளாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கீழ்ப்படிதலோடு அறிக்கையிட்டதினால், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் தாராளமாக தர்ம உதவிகள் செய்கிறதினாலும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; 14 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினால் உங்கள்மேல் வாஞ்சையாக இருக்கிறார்கள். 15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
நேரிலும் தைரியமாகச் செயல்பட முடியும் என்று பவுல் எச்சரித்தல்
நேரில் இருக்கும்போது மட்டுமே சாந்தமாகவும், தொலைவில் இருக்கும்போது கடிதங்களில் தைரியமாகவும் இருப்பதாகத் தம்மை அவதூறு செய்த பொய்ப்போதகரையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் பவுல் இப்போது குறிப்பாக நோக்கிப் பேசுகிறார். தாம் தொலைவில் இருந்தாலும், மாம்சத்தின்படி வாழ்வதாகத் தம்மைக் குற்றஞ்சாட்டுகிறவர்கள், தாம் நேரில் வரும்போது தமது தைரியத்தை நிரூபிக்க வேண்டிய காரணத்தைத் தராதிருக்கும்படி இப்போது நையாண்டியுடன் வேண்டுகிறார். நற்செய்திக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கத் தேவன் தமக்குக் கொடுத்த அசாதாரண வல்லமைகளை அறிவிக்கிறார்; மேலும், அவர்களிடையே மனந்திரும்பியவர்களின் கீழ்ப்படிதல் நிறைவடைந்தவுடன், கீழ்ப்படியாமையைத் தண்டிப்பதற்குத் தமது அற்புத வல்லமையை வெளிப்படுத்த ஆயத்தமாக இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்.
1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாகவும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்புடனும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்வைத்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 2 எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 3 நாங்கள் சரீரத்தில் நடக்கிறவர்களாக இருந்தும் சரீரத்தின்படி போர் செய்கிறவர்கள் இல்லை. 4 எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது. 5 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். 6 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.