பவுல் ரோமர்களுக்கு எழுதுகிறார்

அகாயாவிலிருந்து மக்கெதோனியாவுக்குச் செல்லும் வழியில், பவுல் கொரிந்துவிலிருந்து ரோமாபுரியிலுள்ள யூதர்களுக்கும் யூதரல்லாதோருக்கும் தமது கடிதத்தை எழுதுகிறார். யூதரல்லாதோர் மிகவும் புகழ்ந்து பேசும் தத்துவமோ, அவர்களுடைய ஒழுக்க நற்பண்போ, மனிதப் பகுத்தறிவின் ஒளியோ அவர்களைத் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்க முடியாது என்று அவர்களுக்கு நிரூபிக்கிறார். மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பற்றிய அறிவோ, அதற்குக் கீழ்ப்படிவதோ தங்களை நீதிமான்களாக்க முடியாது என்று யூதர்களுக்கு நிரூபிக்கிறார். கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசம் மட்டுமே மனிதகுலம் முழுவதற்கும் இரட்சிப்பின் ஒரே வழியாக இருக்கிறது; எப்போதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது.

கி.பி. 58

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பவுல் ரோமர்களை வாழ்த்துகிறார்

பவுல் ஓர் அப்போஸ்தலராகத் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார். கிறிஸ்து தாவீதின் வழிவந்தவர் என்பதன் மூலம் அவரது மனித இயல்பையும், உயிர்த்தெழுதலின் மூலம் அவரது தெய்வீக இயல்பையும் காட்டுகிறார். ரோமாபுரிச் சபையில் பெரும்பான்மையாக இருந்த யூதரல்லாதோருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைக் கிறிஸ்துவிடமிருந்து தாம் பெற்றதாகவும், எனவே அவர்களுக்கு உரையாற்றத் தமக்கு அதிகாரம் இருப்பதாகவும் அறிவிக்கிறார்.

ரோமர் 1:1–7

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், 2 ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4 இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 5 சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார். 6 அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.

பவுல் ரோமர்களைச் சந்திக்க ஏங்குகிறார்

பவுல் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து மகிழ்கிறார். ஏதாவது ஓர் ஆவிக்குரிய வரத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களைப் பலப்படுத்துவதற்காக, அவர்களைச் சந்திக்கத் தாம் கொண்டுள்ள மிகுந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறார். அந்த வரம் ஒரு சான்றாக இருந்து, அவரும் அவர்களும் கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசத்தில் ஒருவரையொருவர் பலப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் உதவும். எல்லா நாடுகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க நியமிக்கப்பட்ட அவர், மூன்று காரணங்களுக்காக ரோமர்களுக்கும் அதை அறிவிக்க இன்னும் விரும்புகிறார். முதலாவதாக, அது யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இரட்சிப்பை அளிக்கும் தேவனுடைய வல்லமை என்று உறுதிப்படுத்துகிறார். இரண்டாவதாக, நற்செய்தியில் மட்டுமே தேவனுடைய நீதி வெளிப்படுத்தப்படுகிறது; அவரால் நீதிமான்களாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரே நிபந்தனையும் அதில் வெளிப்படுகிறது. அது செயல்களால் அல்ல, விசுவாசத்தாலேயே ஆகும். மூன்றாவதாக, நற்செய்தி மோசேயின் நியாயப்பிரமாணத்தைவிடவும், மனச்சாட்சியின் ஒளி அல்லது சட்டத்தைவிடவும் மேலானது; ஏனெனில் அவை இரண்டும் பாவம் செய்த அனைவருக்கும் எந்த நிபந்தனையுமின்றி மரணத்தீர்ப்பு வழங்குகின்றன.

ரோமர் 1:8–18

8 உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார். 10 நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும், 11 உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே, 12 நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். 13 சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை. 14 கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன். 15 எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன். 16 கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. 17 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.

18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யூதரல்லாதோர் தேவனை அறிந்தும் அவரைவிட்டு விலகினர்

படைப்பின் செயல்களில் தேவனைப் பற்றியும் அவரது மகிமையான பரிபூரண குணங்களைப் பற்றியும் யூதரல்லாதோருக்குப் போதுமான சான்றுகள் இருந்தன என்பதைப் பவுல் காட்டுகிறார். இயற்கையின் சட்டத்தால் எவரும் இரட்சிப்பைப் பெற முடியாது என்பதைக் காட்ட, மனித அறிவிலும் ஞானத்திலும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்த கிரேக்கர்களின் தீயொழுக்கங்களைப் பட்டியலிடுகிறார். அவர்கள் தேவனை அறிந்திருந்தும் அவரைப் பற்றிய அறிவை மறைத்தார்கள் என்றும், இறுதியில் அவர்களுடைய இருதயங்கள் சத்தியத்தைக் காண முடியாமல் போய், படைத்தவருக்குப் பதிலாகப் படைக்கப்பட்டதை வழிபடுவதை நிறுவினார்கள் என்றும் வலியுறுத்துகிறார். அவர்களுடைய குற்றங்களுக்குக் காத்திருந்த தண்டனையைப் பற்றித் தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு அவர்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தும், அவர்கள் அவற்றில் தொடர்ந்து ஈடுபட்டதோடு, மற்றவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்தார்கள்.

ரோமர் 1:19–32

19 தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. 21 அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 26 இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 29 அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக, 30 கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக, 31 உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

யூதர்களும் அதே பாவங்களுக்குக் குற்றவாளிகள்

யூதரல்லாதோரின் பாவங்களுக்காக அவர்களைக் கண்டிப்பதில் சேர்ந்துகொள்ள யூதர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதைப் பவுல் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களும் அதே குற்றங்களுக்குக் குற்றவாளிகள் என்று அறிவித்து, யூதர்களுக்குத் தங்கள் பாவத்தை உணர்த்த இப்போது முயல்கிறார். இத்தகைய குற்றங்களுக்கு எதிராக அவர்களுடைய சொந்த நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேவனுடைய தீர்ப்பு உண்மையானது என்பது அறியப்பட்டதே; அவற்றைச் செய்கிற அனைவரும், யூதர்களாக இருந்தாலும் யூதரல்லாதோராக இருந்தாலும், தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பமாட்டார்கள்.

ரோமர் 2:1–3

1 ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?

தேவன் யூதரையும் கிரேக்கரையும் ஒரேவிதமாக நியாயந்தீர்க்கிறார்

யூதர்கள் மனந்திரும்பாவிட்டால், அவர்களுடைய சிறப்புரிமைகள் அவர்களுடைய ஆக்கினைத்தீர்ப்பை அதிகரிக்கும் என்று பவுல் எச்சரிக்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பு யூதர்களுக்கும் யூதரல்லாதோருக்கும் இடையே வேறுபாடு காட்டுகிறது என்பதை அவர் மறுக்கிறார். தேவன் பாரபட்சம் காட்டாததால், யூதருக்கும் கிரேக்கருக்கும் ஒரே தண்டனைகளும் ஒரே வெகுமதிகளும் சமமாக வழங்கப்படும் என்று உறுதிப்படுத்துகிறார்.

ரோமர் 2:4–11

4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 6 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். 7 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். 8 சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். 9 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும். 10 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடம் பட்சபாதம் இல்லை.

ஒவ்வொருவரும் பெற்ற ஒளியின்படி நியாயந்தீர்க்கப்படுதல்

எல்லா மக்களும் தாங்கள் பெற்ற ஒளி மற்றும் அறிவின் அளவின்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று பவுல் மேலும் அறிவிக்கிறார். நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறியும் அதன்படி நடக்காத யூதர்கள் அல்ல, அதைப் பற்றிப் பிற்காலத்தில் வழங்கப்பட்ட அறிவைப் பெறாமலேயே அதன்படி வாழும் யூதரல்லாதோரும் மற்ற அனைவருமே அந்த மகா நாளில் தேவனுடைய தயவைப் பெறுவார்கள். அப்போது தேவனுடைய நற்செய்தியின்படி, எல்லா மக்களும் மனச்சாட்சி மற்றும் விசுவாசத்தின் சட்டத்தினால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

ரோமர் 2:12–16

12 எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள். 16 என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.