பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதுகிறார்
அப்போஸ்தலனாகத் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும், சபையின் முறைகேடுகளையும் ஒழுங்கின்மைகளையும் கண்டிக்கவும், விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்குப் போதனை மற்றும் ஒழுக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பவுல் கொரிந்தியர்களுக்குத் தமது முதல் கடிதத்தை எழுதுகிறார்.
கி.பி. 57
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பவுல் கொரிந்தியர்களை வாழ்த்துகிறார்
பவுலின் அறிமுகவுரை; இதில் அவர் தமது அப்போஸ்தலத்துவத்தையும் கிறிஸ்து இயேசுவில் விசுவாசிக்கிறவர்களின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறார்.
1 தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், 2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
அவர்களின் மனமாற்றத்தையும் வரங்களையும் குறித்து பவுல் மகிழ்கிறார்
அவர்களின் மனமாற்றத்தையும், கிறிஸ்துவின் சத்தியத்திற்குச் சாட்சியாக அவர்கள் பெற்றிருந்த ஆவிக்குரிய வரங்களையும் குறித்து பவுல் மகிழ்கிறார்.
4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே, 5 நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6 அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 7 அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். 8 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். 9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
பிரிவுகளையல்ல, ஒற்றுமையைப் பவுல் வலியுறுத்துகிறார்
அவர்கள் தாங்கள் எந்தத் தலைவர்களின் பெயர்களில் சேர்ந்துகொண்டார்களோ அந்தத் தலைவர்களைப் பின்பற்றாமல், பிரிவினையே இல்லாத இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஒன்றுபட்டிருக்கும்படி பவுல் வலியுறுத்துகிறார்.
10 சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 11 ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. 12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். 13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? 14 என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, 15 நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 16 ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. 17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
சிலுவை மனித ஞானத்தை மிஞ்சுகிறது
தேவனுடைய வல்லமை கவனிக்கப்படாமல் போகாதபடி, கல்வியறிவும் திறமையும் கொண்ட சொல்வன்மையுடன் அல்லாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்கவே தாம் அனுப்பப்பட்டதாகப் பவுல் உறுதிப்படுத்துகிறார். நற்செய்தியின் சத்தியங்களை மனித ஞானத்தாலோ கல்வியாலோ கண்டறிய முடியாது என்று அறிவிக்கிறார். சிலுவையைப் பற்றிய பிரசங்கம் விசுவாசிக்காதவர்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றினாலும், அது மனிதர்களின் ஞானத்தை மிஞ்சுகிறது; மனமாற்றமடைந்த யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இரட்சிப்புக்கேற்ற தேவ வல்லமையாக இருக்கிறது. நற்செய்தியின் ஞானத்தை எதிர்த்து நிற்கிற கற்றறிந்த தத்துவஞானிகளையும் யூதர்களின் பெரிய மனிதர்களையும் வெட்கப்படுத்துவதற்காக, மனிதர்களில் மிகவும் இகழப்பட்டவர்களைத் தேவன் தேர்ந்தெடுத்திருக்கிறார். கர்த்தரில் அல்லாமல் வேறெதிலும் யாரும் பெருமைபாராட்டாதபடி, மனித சாதனைகள் அனைத்தும் எவ்வளவு தாழ்ந்தவை என்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 19 அந்தப்படி:
“ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து,
புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
20 ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? 21 எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். 24 ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. 26 எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. 27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். 29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
பவுல் மனித சொல்வன்மையின்றிப் பிரசங்கித்தார்
அவர்களுடைய கள்ளப் போதகர்களைப் போலல்லாமல், தாம் அவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தபோது மனித கல்வியறிவாலோ சொல்வன்மையாலோ அதை அலங்கரிக்கவில்லை என்று பவுல் அறிவிக்கிறார். அற்புதங்களின் வல்லமையால் உறுதிப்படுத்தப்பட்ட தெய்வீக வெளிப்பாட்டின் சாட்சியத்திலிருந்தே அவரது வாதங்கள் எடுக்கப்பட்டன. ஆகவே அவர்களுடைய விசுவாசம் மனிதர்களின் ஞானத்தையோ தத்துவத்தையோ சார்ந்திருக்கக்கூடாது.
1 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். 4 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய மறைவான ஞானம்
தாம் உலக ஞானத்தைப் பயன்படுத்தாவிட்டாலும், கொரிந்தியர்கள் தங்களுடைய கள்ளப் போதகர்களைக் குறித்துப் பெருமைபாராட்டக் காரணமில்லை என்பதைப் பவுல் அடுத்துக் காட்டுகிறார். ஏனெனில் மனித முயற்சியோ படிப்போ எட்ட முடியாததும், ஆவியானவரால் தமக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான தேவனுடைய மறைவான இரகசியத்தை அவர் பேசுகிறார். தேவனுடைய ஆவியானவரால் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய தேவனுடைய ஆழமான காரியங்களைப் பரிசுத்த ஆவியானவரின் பிரசங்கத்தின் மூலம் அவர்களுக்கு அறிவிக்கிறார். மனிதத் திறன்களைத் தவிர வேறு உதவியில்லாத இயல்பான, ஆவிக்குரிய தன்மையற்ற மனிதனால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூட முடியாது.
6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, 7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 8 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 9 எழுதியிருக்கிறபடி:
“தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக்
கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை,
அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். 11 மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். 15 ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக
அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.