பகுதி 5: பவுலின் மூன்றாம் நற்செய்திப் பணிப் பயணம்
பவுல் கலாத்தியாவுக்கும் பிரிகியாவுக்கும் மீண்டும் செல்கிறார்
கலாத்தியாவிலும் பிரிகியாவிலும் உள்ள சபைகளைச் சந்திக்கப் பவுல் மீண்டும் அந்தியோகியாவிலிருந்து புறப்படுகிறார்.
கி.பி. 55
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
23 அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
அப்பொல்லோ எபேசுவில் பிரசங்கிக்கிறார்
பவுல் நிறுவிய எபேசு சபைக்கு அப்போது பிரசங்கித்துக்கொண்டிருந்த அப்பொல்லோவின் வரலாறு.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:24–28
24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான். 25 அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26 அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள். 27 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். 28 அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
பிரிகியாவிலிருந்து எபேசுவுக்கு
பவுல் பிரிகியாவிலிருந்து எபேசுவுக்குச் சென்று, அங்குள்ள யூதர்களுடன் விவாதிக்கிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1–10
1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு: 2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5 அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 7 அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள். 8 பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். 9 சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான். 10 இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
எபேசுவில் மந்திரவித்தைப் புத்தகங்கள் எரிக்கப்படுகின்றன கி.பி. 56
பவுல் எபேசுவில் இரண்டு ஆண்டுகள் தங்குகிறார். மக்கள் தங்கள் மந்திரவித்தைப் புத்தகங்களை எரிக்கிறார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11–20
11 பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார். 12 அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13 அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள். 15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16 அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். 17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19 மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். 20 இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
பவுல் தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் அனுப்புகிறார்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21–22
21 இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டும் என்று சொல்லி, 22 தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவிற்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலநாட்கள் ஆசியாவிலே தங்கினான்.