மோசே நீதி நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல்
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
2 “உன் தேவனாகிய யெகோவாவின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, 3 நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால், 4 அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால், 5 அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக. 6 சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது. 7 அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
8 “உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய யெகோவா தெரிந்தெடுத்த இடத்திற்குப்போய், 9 லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும், அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். 10 யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. 11 அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். 12 அங்கே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக. 13 அப்பொழுது மக்கள் எல்லோரும் அதைக் கேட்டு, பயந்து, இனி பிடிவாதம் செய்யாமலிருப்பார்கள்.
14 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; 15 உன் தேவனாகிய யெகோவா தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரர்களுக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. 16 அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. 17 அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம். 18 அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19 இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு, 20 அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.
18:1 “லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம். 2 அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து. 3 மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். 4 உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 5 அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். 6 “இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக வந்தால், 7 அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான். 8 அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.
9 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். 10 தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், 11 மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். 13 உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக.
14 “நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார். 15 உன் தேவனாகிய யெகோவா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக. 16 ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய யெகோவாவை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார். 17 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. 18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19 என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். 20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.