மோசே சடங்கு நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. 2 விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. 3 அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக. 4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்., 5 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். 6 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை. 7 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 9 விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். 10 அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
12 “உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக. 13 அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல், 14 உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. 15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். 16 ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், 17 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். 18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
19 “உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக. 20 யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள். 21 அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம். 22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம். 23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.
16:1 “ஆபீப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 2 யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. 3 நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் சாப்பிடாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாட்கள் வரைக்கும் சாப்பிடுவாயாக; நீ விரைவாக எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். 4 ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம். 5 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். 6 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் மறையும்போது பஸ்காவை அடித்து, 7 உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலே, அதைப் பொரித்துச் சாப்பிட்டு, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. 8 நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
9 “ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். 10 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, 11 உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, 12 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
13 “நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து, 14 உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; 15 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக. 16 வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். 17 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
18 “உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். 19 நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். 20 நீ பிழைத்து, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நீதியையே பின்பற்றுவாயாக.
21 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கும் பலிபீடத்திற்கு அருகில் எந்த தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; 22 எந்த சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா அதை வெறுக்கிறார்.
17:1 “பழுதும் அவலட்சணமுமான யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பாக இருக்கும்.