மோசே நீதி நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர் வேரற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது, 2 நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். 3 கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டாக்குவாய். 4 கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. 5 ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், 6 இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. 7 இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 8 “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, 9 உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், 10 அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். 11 “ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், 12 அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 13 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். 14 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே.
15 “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும். 16 ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், 17 வழக்காடுகிற இருவரும் யெகோவாவுடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. 18 அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால், 19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 20 மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். 21 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
20:1 “நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். 2 நீங்கள்போர்செய்யத் துவங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, மக்களிடத்தில் பேசி: 3 இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று உங்கள் எதிரிகளுடன் போர்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும் வேண்டாம். 4 உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்லவேண்டும். 5 அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யவேண்டியதாகும். 6 திராட்சைத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அனுபவிக்கவேண்டியதாகும். 7 ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். 8 பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும். 9 அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள். 10 “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக. 11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள். 12 அவர்கள் உன்னுடன் சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ அதை முற்றுகையிட்டு, 13 உன் தேவனாகிய யெகோவா அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள ஆண்கள் எல்லோரையும் பட்டயத்தால் வெட்டி, 14 பெண்களையும், குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய யெகோவா உனக்கு ஒப்புக்கொடுத்த உன் எதிரிகளின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக. 15 இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. 16 உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 17 அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய். 18 அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும். 19 “நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்து அதைப் பிடிக்க அநேகநாட்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம் செய்யாதே அவைகளின் கனியை நீ சாப்பிடலாமே; ஆகையால் உனக்குக் கோட்டைமதில் அமைக்க உதவும் என்று அவைகளை வெட்டாதே; வெளியின் மரங்கள் மனிதனுடைய உயிர்வாழ்வதற்கு ஏற்றவைகள். 20 சாப்பிடுவதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டி அழித்து, உன்னோடு போர்செய்கிற பட்டணம் பிடிபடும்வரை அதற்கு எதிராகக் கோட்டைமதில் போடலாம்.