மோசே நீதி நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால், 2 உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலை செய்யப் பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக. 3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும். 5 உன் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனை செய்யவும் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லாக் காய பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும். 6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: 7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை; 8 யெகோவாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு மன்னிக்கப்படும். 9 இப்படிக் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
10 “நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, 11 சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி, 12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களை வெட்டி, 13 தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். 14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
15 “இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும், 16 தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது. 17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.
18 “தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால், 19 அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: 20 எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக. 21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.
22 “கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால், 23 இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.
22:1 “உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய். 2 உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய். 3 அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது. 4 “உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. 5 “ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 6 “வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது. 7 தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். 8 “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும். 9 “உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். 10 மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக. 11 ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே. 12 “நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.
13 “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து: 14 நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; 15 அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். 16 அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, 17 நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள். 18 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19 அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது. 20 அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 21 அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 22 “ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக. 23 “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால், 24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 25 “ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன். 26 பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது. 27 வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
28 “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29 அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 30 “ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.