மோசே நீதி நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு வெட்டப்பட்டவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. 2 “வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. 3 “அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. 4 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும். 5 உன் தேவனாகிய யெகோவா பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய யெகோவா உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய யெகோவா அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார். 6 நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே. 7 “ஏதோமியனை வெறுக்காதே, அவன் உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ அந்நியனாக இருந்தாய். 8 மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படலாம்.
9 “நீ படையெடுத்து உன்னுடைய எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. 10 இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல், 11 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன். 12 “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும். 13 உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும். 14 உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.
15 “தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே. 16 அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம். 17 “இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக இருக்கக்கூடாது. 18 வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். 19 “கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே. 20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே. 21 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பொருத்தனை செய்திருந்தால், அதைச் செலுத்தத் தாமதம்செய்யாதே; உன் தேவனாகிய யெகோவா அதை நிச்சயமாக உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். 22 நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. 23 உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. 24 “நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சைப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. 25 பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால், உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.
24:1 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டபின்பு, அவளிடத்தில் வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். 2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். 3 அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும், 4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே. 5 “ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக. 6 “மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும். 7 “தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 8 “தொழுநோயைக்குறித்து லேவியர்களாகிய ஆசாரியர்கள் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக. 9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். 10 “பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம். 11 வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக. 12 அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல், 13 அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும். 14 “உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே. 15 அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். 16 “பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும். 17 “நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து, 18 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 19 “நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 20 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக; 21 நீ உன் திராட்சைப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 22 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.