மோசே நீதி நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)

கி.மு. 1451

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உபாகமம் 25–26

1 “மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும். 2 குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். 3 அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம். 4 “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே. 5 “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். 6 இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும். 7 அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக. 8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால், 9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லவேண்டும். 10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும். 11 “இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்., 12 அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். 13 “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். 14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம். 15 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும். 16 இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன். 17 “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, 18 நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு. 19 உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம்.

26:1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது, 2 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய், 3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: யெகோவா எங்களுக்குக் கொடுக்க நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன். 5 அப்பொழுது நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நின்று அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்; அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப் போய், அவ்விடத்தில் அந்நியனாகக் குடியிருந்து, அங்கே பெரிய பலத்த எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான். 6 எகிப்தியர்கள் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, 7 எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டோம்; யெகோவா எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்களுடைய சிறுமையையும், வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து, 8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படச்செய்து, 9 எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். 10 இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து, 11 நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக. 12 “தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு, 13 நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை. 14 நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். 15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து பார்த்து, உமது மக்களாகிய இஸ்ரவேலர்களையும், நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, எங்களுக்குக் கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.

16 “இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய். 17 யெகோவா எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். 18 யெகோவாவும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும், 19 நான் உண்டாக்கிய எல்லா மக்களையும்விட, புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கச் செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய யெகோவாவான எனக்குப் பரிசுத்த மக்களாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்” என்றான்.