மீகாவின் தீர்க்கதரிசனங்கள் எசேக்கியாவின் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்கின்றன
கி.மு. 722
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது. 2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி, 3 என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள். 4 அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். 5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: 6 தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். 7 தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். 8 நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். 9 நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி, 10 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். 11 அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். 12 ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும்.
4:1 ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். 2 திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். 3 அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 4 அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. 5 சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். 6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு, 7 நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார். 8 மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும். 9 இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும். 10 மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். 11 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். 12 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். 13 மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
5:1 சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். 2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. 3 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள். 4 அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார்.
5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். 6 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். 7 யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். 8 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். 9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள். 10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து, 11 உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து, 12 சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். 13 உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய். 14 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, 15 செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.