மோவாபின் அழிவை ஏசாயா முன்னறிவிக்கிறார்

கி.மு. 726

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏசாயா 15–16

1 மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது. 2 அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும். 3 அதின் வீதிகளில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள். 4 எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது. 5 என் இருதயம் மோவாபுக்காக ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்திற்கு ஏறிப்போகிற வழியிலே அழுதுகொண்டு ஏறுகிறார்கள்; ஒரொனாயிமின் வழியிலே நொறுங்குதலின் சத்தமிடுகிறார்கள். 6 நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது. 7 ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள். 8 கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்வரை அதின் அலறுதலும், பெரேலீம்வரை அதின் புலம்புதலும் கேட்கும். 9 தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன்.

16:1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள். 2 இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள். 3 நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே. 4 மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள். 5 கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார். 6 மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது. 7 ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள். 8 எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சீப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது. 9 ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது. 10 பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன். 11 ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது. 12 மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான். 13 மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே. 14 ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று யெகோவா இப்பொழுது சொல்கிறார்.