மீகாவின் தீர்க்கதரிசனங்கள் எசேக்கியாவின் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்கின்றன (continued)

கி.மு. 722

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மீகா 6–7

1 யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும். 2 மலைகளே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, யெகோவாவுடைய வழக்கைக் கேளுங்கள்; யெகோவாவுக்கு அவருடைய மக்களோடு வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலர்களோடு அவர் வழக்காடுவார். 3 என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல். 4 நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்து, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். 5 என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். 6 என்னத்தைக்கொண்டு நான் யெகோவாவுடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ? 7 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாக ஓடுகிற பத்தாயிரங்களான ஆறுகளின்பேரிலும், யெகோவா பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்குவதற்காக என் முதற் பிறந்தவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? 8 மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

9 யெகோவாவுடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள். 10 துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? 11 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? 12 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது. 13 ஆகையால் நான் உன் பாவங்களுக்காக உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலவீனமாக்குவேன். 14 நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். 15 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை. 16 நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய அனைத்துச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் மக்களின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

7:1 ஐயோ, கோடைக்காலத்தின் பழங்களைச் சேர்த்து, திராட்சைபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு ஒரு திராட்சைக்குலையும் என் ஆத்துமா விரும்பிய முதல் அறுப்பின் பழமும் இல்லை. 2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். 3 பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள். 4 அவர்களில் நல்லவன் முட்செடியைப்போன்றவன், செம்மையானவன் நெரிஞ்சிலைவிட மிகவும் கூர்மையானவன்; உன் காவற்காரர்கள் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. 5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறக்காமல் எச்சரிக்கையாயிரு. 6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமியாருக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனிதனுடைய எதிரிகள் அவன் வீட்டார்தானே. 7 நானோவென்றால் யெகோவாவை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

8 என் எதிரியே, எனக்கு விரோதமாகச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், யெகோவா எனக்கு வெளிச்சமாயிருப்பார். 9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கும்வரை அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். 10 உன் தேவனாகிய யெகோவா எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் எதிரியானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். 11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும். 12 அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு மலைமுதல் மறு மலைவரைக்குமுள்ள மக்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். 13 ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். 14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. 15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணச்செய்வேன். 16 அந்நியமக்கள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாகிவிடும். 17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள். 18 தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார். 19 அவர் மீண்டும் நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை நீக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். 20 தேவரீர் ஆரம்பநாட்கள்முதல் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.

2 இராஜாக்கள் 18:7–8

7 ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். 8 அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான்.