மனாசேயின் சிறையிருப்பும் மரணமும்
கி.மு. 676
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
11 ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 12 இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். 13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
14 பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, 15 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, 16 யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். 17 ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். 18 மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 19 அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 20 மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
17 மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 18 மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான்.
1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2 யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 3 அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி, 4 எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, 5 யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 6 அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். 7 இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும், 8 நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான். 9 அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான். 10 யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.
பத்துக் கோத்திரத்தாரின் முன்னைய நிலங்கள் கி.மு. 678
முன்பு பத்துக் கோத்திரத்தாரின் வசமிருந்த மாகாணங்களின் நிலை.
24 அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனிதர்களை வரச்செய்து, அவர்களை இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். 25 அவர்கள் அங்கே குடியேறினது முதல், யெகோவாவுக்குப் பயப்படாததால், யெகோவா அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. 26 அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். 27 அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். 28 அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, யெகோவாவுக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். 29 ஆனாலும் அந்தந்த மக்கள் தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டாக்கி, அந்தந்த மக்கள் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர்கள் உண்டாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். 30 பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும், 31 ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள். 32 அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் இழிவானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். 33 அப்படியே யெகோவாவுக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள். 34 இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், யெகோவா இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபின் மக்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தவிதமாகிலும் செய்கிறதுமில்லை. 35 யெகோவா இவர்களோடு உடன்படிக்கைசெய்து, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், வணங்காமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், 36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவாவுக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, 37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 38 நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், 39 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லா எதிரிகளின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். 40 ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். 41 அப்படியே அந்த மக்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.