பகுதி 15: ஆமோனின் ஆட்சி

கி.மு. 643

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 21:19–26

19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத். 20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 21 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த அருவருப்பான சிலைகளை வணங்கி அவைகளைப் பணிந்துகொண்டு, 22 யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான். 23 ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள். 24 அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள். 25 ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான்.

2 நாளாகமம் 33:21–25

21 ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 22 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே செய்துவைத்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளை வணங்கினான். 23 தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். 24 அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள். 25 அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.