பகுதி 14: மனாசேயின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

மனாசேயின் விக்கிரக ஆராதனை

கி.மு. 698

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 21:1–16

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். 2 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான். 4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, 5 யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, 6 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான். 7 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான். 8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார். 9 ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான். 10 ஆகையால் யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது: 11 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால், 12 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து, 13 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். 14 அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். 15 தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார். 16 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.

செப்னாவின் சிறையிருப்பை ஏசாயா முன்னறிவிக்கிறார்

ஏசாயா 22:15–25

15 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரண்மனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்திற்குப்போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால், 16 உயர்ந்த இடத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? 17 இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துவதுபோலக் யெகோவா உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாக உன்னை மூடிப்போடுவார். 18 அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டிற்கு இகழ்ச்சியாக இருக்கும். 19 உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் இடத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். 20 அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: 21 உன் உடையை அவனுக்கு அணிவித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிமக்களுக்கும், யூதாவின் வம்சத்திற்கும் தகப்பனாயிருப்பான். 22 தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். 23 அவனை உறுதியான இடத்திலே ஆணியாக அடிப்பேன்; அவன் தன் தகப்பன் வீட்டிற்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். 24 அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள். 25 உறுதியான இடத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்து விழும் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார்; யெகோவாவே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.