யோசேப்பின் சகோதரர்கள் திரும்பிச் செல்லுதலும் யாக்கோபு பின்தொடர்தலும் (continued)

பஞ்சம் தொடர்கிறது. யோசேப்பின் சகோதரர்கள் இரண்டாம் முறையாக எகிப்துக்குச் செல்கிறார்கள்; அவர்களுடைய தந்தையும் அவர்களைப் பின்தொடர்கிறார்.

கி.மு. 1706

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதியாகமம் 46:1–47:12

1 இஸ்ரவேல் தனக்கு உண்டான எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். 2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்” என்றான். 3 அப்பொழுது அவர்: “நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்திற்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய தேசமாக்குவேன். 4 நான் உன்னுடனே எகிப்திற்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரச்செய்வேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்” என்று சொன்னார். 5 அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து புறப்பட்டான். இஸ்ரவேலின் மகன்கள் தங்களுடைய தகப்பனாகிய யாக்கோபையும், குழந்தைகளையும், மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, 6 தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள். 7 அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.

8 எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன். 9 ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 10 சிமியோனுடைய மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல் என்பவர்கள். 11 லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 12 யூதாவினுடைய மகன்கள் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 13 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். 14 செபுலோனுடைய மகன்கள் சேரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். 15 இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு மகளையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்; அவனுடைய மகன்களும், மகள்களுமாகிய எல்லோரும் முப்பத்துமூன்றுபேர். 16 காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி என்பவர்கள். 17 ஆசேருடைய மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராக்கு என்பவள்; பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள். 18 இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள். 19 யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய மகன்கள் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். 20 யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றெடுத்தாள். 21 பென்யமீனுடைய மகன்கள் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பீம், ஆர்து என்பவர்கள். 22 ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற மகன்களாகிய இவர்கள் எல்லோரும் பதினான்குபேர். 23 தாணுடைய மகன் உசீம் என்பவன். 24 நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள். 25 இவர்கள் லாபான் தன் மகளாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லோரும் ஏழுபேர். 26 யாக்கோபுடைய மகன்களின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாக எகிப்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அறுபத்தாறுபேர். 27 யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த மகன்கள் இரண்டுபேர்; ஆக எகிப்திற்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.

28 கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள். 29 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான். 30 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றான். 31 பின்பு, யோசேப்பு தன் சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: “நான் பார்வோனிடத்திற்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். 32 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன். 33 பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால், 34 நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்க, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லோரும் எகிப்தியருக்கு அருவருப்பாக இருக்கிறார்கள்” என்றான்.

47:1 யோசேப்பு பார்வோனிடம் சென்று: “என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள்” என்று சொல்லி; 2 தன் சகோதரர்களில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். 3 பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: “உங்களுடைய தொழில் என்ன” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி, 4 கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். 5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: “உன்னுடைய தகப்பனும், சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. 6 எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக ஏற்படுத்தலாம் என்றான். 7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். 8 பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான். 9 அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான். 10 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான். 11 பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். 12 யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

யோசேப்பு எகிப்தை ஆளுதல் கி.மு. 1704

ஆதியாகமம் 47:13–26

13 பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது. 14 யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். 15 எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள். 16 அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான். 17 அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். 18 அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. 19 நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள். 20 அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று. 21 மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான். 22 ஆசாரியர்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் வாங்கவில்லை; அது பார்வோனாலே ஆசாரியர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்ததாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை. 23 பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள். 24 விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும்” என்றான். 25 அப்பொழுது அவர்கள்: “நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம்” என்றார்கள். 26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.