யோசேப்பின் சகோதரர்கள் திரும்பிச் செல்லுதலும் யாக்கோபு பின்தொடர்தலும் (continued)
பஞ்சம் தொடர்கிறது. யோசேப்பின் சகோதரர்கள் இரண்டாம் முறையாக எகிப்துக்குச் செல்கிறார்கள்; அவர்களுடைய தந்தையும் அவர்களைப் பின்தொடர்கிறார்.
கி.மு. 1706
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ இந்த மனிதர்களுடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாகத் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கிலே போட்டு, 2 இளையவனுடைய சாக்கிலே வெள்ளிப் பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்திற்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு” என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான். 3 அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள். 4 அவர்கள் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? 5 அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவிதம் ஞானபார்வையினால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களிடம் சொல்” என்றான். 6 அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான். 7 அதற்கு அவர்கள்: “எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்திற்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம். 8 எங்களுடைய சாக்குகளிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்பவும் உம்மிடத்திற்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா? 9 உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலை செய்யப்படுவானாக; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம்” என்றார்கள். 10 அதற்கு அவன்: “நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமில்லாதிருப்பீர்கள்” என்றான். 11 அப்பொழுது அவர்கள் வேகமாக அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள். 12 மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குவரை அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது. 13 அப்பொழுது அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் மூட்டையை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள். 14 யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். 15 யோசேப்பு அவர்களை நோக்கி: “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்றான். 16 அதற்கு யூதா: “என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? எதைப் பேசுவோம்? எதினாலே எங்களுடைய நீதியை விளங்கச்செய்வோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கச்செய்தார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள்” என்றான். 17 அதற்கு அவன்: “அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள்” என்றான்.
18 அப்பொழுது யூதா அவனருகில் வந்து: “ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் வராதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். 19 உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். 20 அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். 21 அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 22 நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். 23 அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 24 நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம். 25 எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார். 26 அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனுடைய முகத்தைக் காணமுடியாது என்றோம். 27 அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; 28 அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 29 நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். 30 ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால், 31 அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். 32 இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்திரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். 33 இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன். 34 இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.
45:1 அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. 2 அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். 3 யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள். 4 அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். 5 என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். 6 தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். 7 பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். 8 ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார். 9 நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். 10 நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம். 11 உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். 12 இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. 13 எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி; 14 தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். 15 பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
16 யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். 17 பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய், 18 உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். 19 நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். 20 உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான். 21 இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும், 22 அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான். 23 அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். 24 மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். 25 அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து: 26 யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. 27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. 28 அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.