பகுதி 6: யாக்கோபு மற்றும் முற்பிதாக்களின் மரணங்கள்
யாக்கோபு தனது மகன்களை ஆசீர்வதித்து இறத்தல்
கி.மு. 1689
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
27 இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள். 29 இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக. 30 நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான். 31 அப்பொழுது அவன்: “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கை கோலில் சாய்ந்து தொழுதுகொண்டான்.
48:1 அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான். 2 “இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 3 யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து: 4 நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார். 5 நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். 6 இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள். 7 நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன்” என்றான். 8 இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான். 9 யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான். 10 முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான். 11 இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான். 12 அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். 13 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். 14 அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். 15 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து:
“என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும்,
நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
16 எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக,
என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது;
பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.
17 தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாததால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைப்பதற்காக எடுத்து: 18 “என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும்” என்றான். 19 அவனுடைய தகப்பனோ தடுத்து: “அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாகப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான மக்களாவார்கள்” என்றான். 20 இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான். 21 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடு இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்திற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார் என்றும், 22 உன் சகோதரர்களுக்குக் கொடுத்ததைவிட, நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர்கள் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன்” என்றும் சொன்னான்.
49:1 யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். 2 யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. 3 “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். 4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. 5 சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். 6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. 7 அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். 8 யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். 9 யூதா பெரிய சிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10 சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். 11 அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். 12 அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும். 13 செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். 14 இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. 15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான். 16 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். 17 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். 18 யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன். 19 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். 20 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான். 21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். 22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். 23 வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். 24 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். 25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். 26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான். 28 இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
29 பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு; 30 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். 31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன். 32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.