இரண்டு நாட்களில் தாம் சிலுவையில் அறையப்படுவதை இயேசு முன்னறிவித்தல்

இன்றிலிருந்து இரண்டு நாட்களில் (யூதர்களின் வெள்ளிக்கிழமையன்று) தாம் சிலுவையில் அறையப்படுவதை இயேசு முன்னறிவிக்கிறார்.

அநேகமாகச் செவ்வாய்க்கிழமை மாலையில் பெத்தானியாவில் (யூதர்களின் புதன்கிழமையின் தொடக்கம்). எருசலேமிலுள்ள தலைவர்கள் அவரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 26:1–5

26:1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: 2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

3 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,

4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.

5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.

மாற்கு 14:1–2

14:1 இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.

2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.

லூக்கா 22:1–2

22:1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.

2 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.

பெத்தானியாவைச் சேர்ந்த மரியாள் இயேசுவை அடக்கத்திற்காக அபிஷேகம் செய்தல்

குஷ்டரோகியான சீமோனின் வீட்டில் நடந்த விருந்தில், பெத்தானியாவைச் சேர்ந்த மரியாள் இயேசுவை அவரது அடக்கத்திற்காக அபிஷேகம் செய்கிறாள்.

பெத்தானியாவில் (செவ்வாய்க்கிழமை மாலை, யூதர்களின் புதன்கிழமை)

மத்தேயு 26:6–13

26:6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, 7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.

8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?

9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

10 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.

11 தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.

12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.

13 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:3–9

14:3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.

4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?

5 இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள்.

6 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

7 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.

8 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.

9 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 12:2–8

12:2 அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.

4 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:

5 இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான்.

6 அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான்.

7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

8 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார்.