பகுதி 12: இயேசுவுடன் நிழலில்

கி.பி. 30 (அல்லது 29), பாடுகளின் வாரத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வியாழக்கிழமை இரவு வரை. எருசலேம்

இயேசு இப்போது தமது மரணத்தின் துயர நிகழ்வை எதிர்கொள்ளவும், தாம் சென்றபின் தமது பணியைத் தொடரவும் சீடர்களை ஆயத்தப்படுத்த முற்படுகிறார்.

கடைசிக்காலம் குறித்த மாபெரும் பிரசங்கம்

ஒலிவமலையில் அமர்ந்தபடி இயேசு தமது சீடர்களிடம் எருசலேமின் அழிவையும் தமது இரண்டாம் வருகையையும் பற்றிப் பேரழிவையும் இறுதிக்கால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் மொழியில் பேசுகிறார். இறுதிக்கால நிகழ்வுகள் குறித்த மாபெரும் பிரசங்கம்.

(செவ்வாய்க்கிழமை பிற்பகல்)

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 24:1–25:46

24:1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். 2 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;

5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.

6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.

7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள். 12 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

13 இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,

16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.

17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.

18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.

19 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.

20 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21 ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். 22 அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.

23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.

24 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26 ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள். 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

29 அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.

30 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.

31 வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.

33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

34 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

36 அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். 38 எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், 39 பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். 40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். 41 இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.

42 உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

43 திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள். 44 நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள். 45 ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? 46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். 47 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, 49 தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், 50 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, 51 அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

25:1 அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். 2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். 3 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 4 புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 5 மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6 நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. 7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். 8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. 11 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12 அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

14 அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. 15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். 16 ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். 17 அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். 18 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். 19 அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். 20 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 21 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 22 இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 23 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 24 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். 25 ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். 26 அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. 27 அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, 28 அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். 29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

31 அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32 அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34 அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; 43 அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

மாற்கு 13:1–37

13:1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். 2 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.

3 பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:

4 இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.

6 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.

7 யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.

8 மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.

12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். 13 என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.

15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும்.

16 வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.

17 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!

18 இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள். 19 ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும். 20 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.

22 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

23 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

24 அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.

26 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.

27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.

28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.

29 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

30 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

32 அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.

33 அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். 34 ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.

35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது. 36 நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள். 37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

லூக்கா 21:5–36

21:5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது, 6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

7 அவர்கள் அவரைப் பார்த்து: போதகரே, இவைகள் எப்பொழுது நடக்கும், இவைகள் நடக்கும் காலத்திற்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

8 அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

9 சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

10 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும். 11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள்.

13 ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். 14 ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். 15 உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

16 பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். 17 என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். 18 ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது. 19 உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

20 எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.

21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், கிராமத்திலிருக்கிறவர்கள் நகரத்தில் நுழையாமலிருக்கவும் வேண்டும்.

22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

23 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இக்கட்டும் இந்த மக்கள்மேல் தண்டனையும் உண்டாகும்.

24 வாளால் கொலை செய்யப்பட்டு விழுவார்கள், எல்லா நாடுகளுக்கும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.

25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள மக்களுக்குத் தத்தளிப்பும் இக்கட்டும் உண்டாகும்; கடலும் அலைகளும் முழக்கமாக இருக்கும். 26 வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும்.

27 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.

28 இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார்.

29 அன்றியும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். 30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள்.

31 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள்.

32 இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தச் சந்ததி அழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

33 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

34 உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள். 35 உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.

36 ஆகவே, இனி நடக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனிதகுமாரனுக்குமுன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்செய்து விழித்திருங்கள் என்றார்.