இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதா பேரம் பேசுதல்
விருந்தில் இயேசு கண்டித்ததால் மனம் புண்பட்ட யூதா, அவரைக் காட்டிக்கொடுக்கத் தலைவர்களுடன் பேரம் பேசுகிறான்.
செவ்வாய்க்கிழமை இரவு எருசலேமில்
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 26:14–16
26:14 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
மாற்கு 14:10–11
14:10 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான்.
11 அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
லூக்கா 22:3–6
22:3 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான்.
5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6 அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
ஒரு நண்பரின் வீட்டில் பஸ்கா உணவை ஆயத்தம் செய்தல்
ஒரு நண்பரின் வீட்டில் பஸ்கா உணவுக்கான ஆயத்தம் (அது யோவான் மாற்குவின் தந்தையும் தாயும் வசித்த வீடாக இருக்கலாம்).
எருசலேம், வியாழக்கிழமை பிற்பகல். (ஆயத்த நாள்)
மத்தேயு 26:17–19
26:17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19 இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
மாற்கு 14:12–16
14:12 பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13 அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்;
14 அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15 அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16 அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
லூக்கா 22:7–13
22:7 பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். 9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய்,
11 அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள்.
12 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13 அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
இயேசு பன்னிருவருடன் பஸ்கா உணவை உண்ணுதல்
இயேசு பன்னிரு அப்போஸ்தலர்களுடன் பஸ்கா உணவை உண்டு, அவர்களுடைய பொறாமையைக் கண்டிக்கிறார்.
எருசலேம், வியாழக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின் (யூதர்களின் வெள்ளிக்கிழமையின் தொடக்கம்)
மத்தேயு 26:20
26:20 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
மாற்கு 14:17
14:17 மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
லூக்கா 22:14–16, 24–30
22:14 நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள்.
15 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். 16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. 25 அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். 26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 27 பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். 28 மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29 ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார்.