கூரை வழியாக இறக்கப்பட்ட திமிர்வாதக்காரனை இயேசு குணமாக்குகிறார்
கப்பர்நகூமில் மக்கள் கூட்டம் தம்மைச் சுற்றி நெருக்கிக்கொண்டிருக்கையில், பேதுருவின் வீட்டுக் கூரை வழியாக இறக்கப்பட்ட திமிர்வாதக்காரனை இயேசு குணமாக்குகிறார்.
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 9:1–8
9:1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? 6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மாற்கு 2:1–12
2:1 சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; 2 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
3 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; 4 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: 7 இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8 அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன?
9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?
10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: 11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா 5:17–26
5:17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.
18 அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள். 19 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள்.
22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?
23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.
26 அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.