இயேசு பேதுருவின் மாமியாரையும் இன்னும் பலரையும் குணமாக்குகிறார்

கப்பர்நகூமில், பேதுருவின் வீட்டில்

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 8:14–17

8:14 இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.

15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

16 மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.

17 அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மாற்கு 1:29–34

1:29 உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.

30 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.

31 அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

32 மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.

33 பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.

34 பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.

லூக்கா 4:38–41

4:38 பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

39 அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

40 சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார்.

41 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.

இயேசு நான்கு மீனவர்களுடன் முதன்முறையாகக் கலிலேயாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்

இங்கே இயேசு நான்கு மீனவர்களுடன் கலிலேயாவில் தமது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்; தம்மை இடைவிடாமல் பின்பற்றுமாறு இப்போது அவர்களை அழைத்திருக்கிறார். கப்பர்நகூமுக்குத் திரும்பிவரும்போது மத்தேயு அழைக்கப்படுகிறார்; பல்வேறு அற்புதங்கள் மக்கள் கூட்டத்தினரின் உற்சாகத்தையும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரான பரிசேயர்களின் பகைமையையும் தூண்டுகின்றன.

மத்தேயு 4:23–25

4:23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். 24 அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மாற்கு 1:35–39

1:35 அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். 36 சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,

37 அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். 38 அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

39 கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

லூக்கா 4:42–44

4:42 சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர்.

43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார்.

44 அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

இயேசு ஒரு குஷ்டரோகியைக் குணமாக்குகிறார்

ஒரு குஷ்டரோகி குணமாக்கப்படுகிறார்; மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.

மத்தேயு 8:2–4

8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான்.

3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

4 இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

மாற்கு 1:40–45

1:40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். 42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.

43 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு; 44 ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.

45 ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.

லூக்கா 5:12–16

5:12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.

14 அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.

15 அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள். 16 அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.