இயேசு மத்தேயுவை அழைக்கிறார்; மத்தேயு அவருக்காக விருந்து அளிக்கிறார்

இயேசு மத்தேயுவை (லேவியை) அழைக்கிறார்; மத்தேயு இயேசுவைக் கௌரவிக்கும் வகையில் விருந்து அளிக்கிறார்.

கப்பர்நகூம்

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 9:9–13

9:9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.

10 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.

11 பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.

12 இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

மாற்கு 2:13–17

2:13 அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.

14 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.

15 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.

16 இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.

17 இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

லூக்கா 5:27–32

5:27 இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.

28 அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.

29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.

30 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.

31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை. 32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

தமது சீடர்கள் உபவாசிக்காததை இயேசு நியாயப்படுத்துகிறார்

மூன்று உவமைகளால், தமது சீடர்கள் உபவாசிப்பதற்குப் பதிலாக விருந்துண்பதை இயேசு நியாயப்படுத்துகிறார்.

மத்தேயு 9:14–17

9:14 அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.

15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.

16 ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.

17 புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.

மாற்கு 2:18–22

2:18 யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள்.

19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.

20 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.

21 ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.

22 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.

லூக்கா 5:33–39

5:33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.

34 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா?

35 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.

36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.

37 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும். 38 புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும். 39 அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.