எருசலேமின் துன்பங்களும் அழிவும் முன்னறிவிக்கப்படுதல்

கி.மு. 595

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 3:22–5:17

22 அந்த இடத்திலே யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார். 23 அப்படியே நான் எழுந்திருந்து, சமவெளிக்கு புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியின் அருகிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே யெகோவாவுடைய மகிமை வெளிப்பட்டது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். 24 உடனே தேவனுடைய ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கச்செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன்னுடைய வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. 25 இதோ, மனிதகுமாரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். 26 நான் உன்னுடைய நாக்கை உன்னுடைய மேல்வாயுடன் ஒட்டிக்கொள்ளச்செய்வேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனிதனாக இல்லாமல், ஊமையனாக இருப்பாய்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள். 27 நான் உன்னுடன் பேசும்போது, உன்னுடைய வாயைத் திறப்பேன்; அப்பொழுது யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதைச் சொன்னார் என்று அவர்களுடன் சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேட்காதவன் கேட்காமல் இருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

4:1 மனிதகுமாரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உனக்குமுன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, 2 அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை. 3 மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம். 4 நீ உன்னுடைய இடதுபக்கமாக ஒருபக்கமாகப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாக ஒருக்களித்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய். 5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள் கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும். 6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன்னுடைய வலதுபக்கமாக ஒருக்களித்து, யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பதுநாட்கள் வரையும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருடத்திற்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன். 7 நீ எருசலேமின் முற்றுகைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த கரமுமாக இருந்து, அதற்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். 8 இதோ, நீ அதை முற்றுகைப்போடும் நாட்களை நிறைவேற்றும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளமுடியாதபடி உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். 9 நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயிற்றையும், சிறுபயிற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பம்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடவேண்டும். 10 நீ சாப்பிடும் உணவு, நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாக இருக்கும்; அப்படி ஒவ்வொருநாளும் சாப்பிடுவாயாக. 11 தண்ணீரையும் அளவாக ஹின் என்னும் படியில் ஆறில் ஒரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிக்கவேண்டும். 12 அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடு; அது மனிதனிலிருந்து கழிந்த மலத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படவேண்டும். 13 அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார். 14 அப்பொழுது நான்: ஆ, உன்னதமான தேவனே, இதோ, என்னுடைய ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாகச் செத்ததையோ, மிருகத்தால் வேட்டையாடப்பட்டதையோ நான் என்னுடைய சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என்னுடைய வாய்க்குள் போனதுமில்லை என்றேன். 15 அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனித மலத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன்னுடைய அப்பத்தைச் சுடு என்றார். 16 பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும், 17 நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.

5:1 பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும். 2 மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றுகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே நெருப்பால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றவேண்டும்; அவைகளின் பின்னாக நான் வாளை உருவுவேன். 3 அதில் கொஞ்சம்மட்டும் எடுத்து, அதை உன்னுடைய ஆடையின் ஓரங்களில் முடிந்துவைக்கவேண்டும். 4 பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரி; அதிலிருந்து இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் எதிராக அக்கினி புறப்படும். 5 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது. 6 அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள். 7 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளைவிட அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என்னுடைய கட்டளைகளிலே நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியோ நடக்காமலும் போனபடியினாலே, 8 இதோ, நான், நானே உனக்கு எதிராக வந்து, அந்நியஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, 9 நான் முன்பு செய்யாததும் இனிச் செய்யாமல் இருப்பதுமான விதமாக உனக்கு உன்னுடைய எல்லா அருவருப்புகளுக்காகவும் செய்வேன். 10 ஆதலால் உன்னுடைய நடுவிலே தகப்பன்மார்கள் பிள்ளைகளைச் சாப்பிடுவார்கள்; பிள்ளைகள் தகப்பன்மார்களைச் சாப்பிடுவார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாக இருப்பவர்களையெல்லாம் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11 ஆதலால், சீ என்று இகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன்னுடைய கிரியைகளால் நீ என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினதால் என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகச்செய்வேன், நான் இரங்கமாட்டேன், இதை என்னுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். 12 உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் மரணமடைவார்கள், பஞ்சத்தாலும் உன்னுடைய நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்து, அவர்கள் பின்னே வாளை உருவுவேன். 13 இப்படி என்னுடைய கோபம் நிறைவேறும்; இப்படி நான் என்னுடைய உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கச்செய்வதால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, யெகோவாகிய நான் என்னுடைய வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள். 14 கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன். 15 நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாக இருக்கும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். 16 உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கு ஏதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கச்செய்து, உங்களுடைய அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். 17 பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமல் போகச்செய்து காட்டுமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; வாளை நான் உன்மேல் வரச்செய்வேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.