எசேக்கியேல் பணிக்காக நியமிக்கப்படுதல் (continued)
கி.மு. 595
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். 2 இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன். 3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள். 4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல். 5 கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6 மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள். 7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8 மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார். 9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது. 10 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
3:1 பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார். 2 அப்படியே என்னுடைய வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு சாப்பிடக்கொடுத்து: 3 மனிதகுமாரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன்னுடைய வயிற்றிற்கு உட்கொண்டு, அதினால் உன்னுடைய குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதை சாப்பிட்டேன்; அது என்னுடைய வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது. 4 பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு. 5 புரியாத பேச்சும், கடினமான மொழியுமுள்ள மக்கள் அருகில் அல்ல, இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். 6 புரியாத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான மொழியுமுள்ள திரளான மக்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உன்னுடைய பேச்சை கேட்பார்களோ? 7 இஸ்ரவேல் மக்களோவெனில், உன்னுடைய பேச்சை கேட்கமாட்டார்கள்; என்னுடைய பேச்சையே கேட்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். 8 இதோ, உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவும், உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றிக்கு முன்பாகவும் கடினமாக்கினேன். 9 உன்னுடைய நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைவிட கடினமாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்களுடைய முகங்களுக்கு கலங்காமலும் இரு என்றார். 10 பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நான் உன்னுடனே சொல்லும் என்னுடைய வார்த்தைகளையெல்லாம் நீ உன்னுடைய காதாலே கேட்டு, உன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, 11 நீ போய், சிறைப்பட்ட உன்னுடைய மக்களிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களுடன் சொல் என்றார். 12 அப்பொழுது தேவனுடைய ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; யெகோவாவுடைய இடத்திலிருந்து வெளிப்பட்ட அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். 13 ஒன்றோடொன்று இணைந்திருக்கிற உயிர்களுடைய இறக்கைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். 14 தேவனுடைய ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என்னுடைய ஆவியின் கடுங்கோபத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் யெகோவாவுடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. 15 கேபார் நதியின் அருகிலே தெலாபீபிலே தங்கியிருக்கிற சிறைப்பட்டவர்களிடத்திற்கு நான் வந்து, அவர்கள் வாழ்கிற இடத்திலே வாழ்ந்து, ஏழுநாட்கள் அவர்களின் நடுவிலே பிரமித்தவனாகத் தங்கினேன். 16 ஏழுநாட்கள் முடிந்தபின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17 மனிதகுமாரனே, உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயராலே அவர்களை எச்சரிப்பாயாக. 18 இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன். 19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன்னுடைய துன்மார்க்கத்தையும் தன்னுடைய ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமல்போனால், அவன் தன்னுடைய துன்மார்க்கத்திலே மரிப்பான்; நீயோவென்றால் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றுவாய். 20 அப்படியே, நீதிமான் தன்னுடைய நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் மரிப்பான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன்னுடைய பாவத்திலே மரிப்பான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னுடைய கையிலே கேட்பேன். 21 நீதிமான் பாவம் செய்யாதபடி நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவம்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றினாய் என்றார்.