எருசலேமின் துன்பங்களும் அழிவும் முன்னறிவிக்கப்படுதல் (continued)
கி.மு. 595
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால், 3 இஸ்ரவேலின் மலைகளே, யெகோவாகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் மலைகளையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே வாளை வரச்செய்து, உங்களுடைய மேடைகளை அழித்துப்போடுவேன். 4 உங்களுடைய பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்களுடைய சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலைசெய்யப்படுகிறவர்களை உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு முன்பாக விழச்செய்வேன். 5 நான் இஸ்ரவேல் மக்களுடைய பிரேதங்களை அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் முன்னே கிடக்கச்செய்து, உங்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் உங்களுடைய எலும்புகளைச் சிதறச்செய்வேன். 6 உங்கள் பலிபீடங்கள் அழிவும் பாழுமாகும்படிக்கும், உங்களுடைய அசுத்தமான சிலைகள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்களுடைய சிலைகள் வெட்டப்பட்டு, உங்களுடைய செயல்கள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய எல்லா குடியிருப்புகளிலுமுள்ள பட்டணங்கள் அழிவும் உங்களுடைய மேடைகள் பாழுமாகும். 7 கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 8 நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, அந்நியஜாதிகளுக்குள்ளே பட்டயத்திற்குத் தப்புவோரை உங்களுக்கு மீதியாக வைப்பேன். 9 என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து, 10 இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு சம்பவிக்கச்செய்வேன் என்று யெகோவாகிய நான் வீணாகச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார். 11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய கையில் அடித்து, உன்னுடைய காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய எல்லா பொல்லாத அருவருப்புகளுக்காகவும் ஐயோ, என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள். 12 தூரத்தில் இருக்கிறவன் கொள்ளைநோயால் மரிப்பான்; அருகில் இருக்கிறவன் வாளால் விழுவான்; மீதியாக இருந்து, முற்றுகைபோடப்பட்டவன் பஞ்சத்தால் மரிப்பான்; இப்படி அவர்களில் என்னுடைய கடுங்கோபத்தை தீர்த்துக்கொள்ளுவேன். 13 அவர்கள் தங்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளுக்கும் இனியவாசனையான தூபத்தைக் காட்டின இடங்களாகிய உயர்ந்த எல்லா மேடுகளிலும், மலைகளுடைய எல்லா சிகரங்களிலும், பச்சையான எல்லா மரங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் கிடக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். 14 நான் என்னுடைய கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வீடுகளுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்திரத்தைவிட அதிகமாகப் பாழாக்குவேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
7:1 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது. 3 இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன். 4 என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 5 உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது. 6 முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாக இருக்கிறது; இதோ, வருகிறது. 7 தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை. 8 இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன். 9 என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 10 இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது, கோல் பூக்கிறது, அகந்தை செழிக்கிறது. 11 அக்கிரமமானது கொடுமையின் கோலாக எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கூட்டத்திலும் அவர்களுடைய அழிவிலும் ஒன்றும் மீதியாக இருப்பதில்லை; அவர்களுக்காக புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை. 12 அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும். 13 அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான். 14 அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது. 15 வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் வாளால் மரிப்பான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் சாப்பிடும். 16 அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள். 17 எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும். 18 சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும். 19 தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது. 20 அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி, 21 அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். 22 என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். 23 ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது. 24 ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும். 25 அழிவு வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடைக்காது. 26 அழிவின்மேல் அழிவு வரும்; தீயசெய்தியின்மேல் தீயசெய்தி வரும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்தில் தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இல்லாமல் ஒழிந்துபோகும். 27 ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.