இரண்டாம் யெரொபெயாமின் மரணத்திற்குப் பின் ராஜா இல்லாத இஸ்ரவேல்

கி.மு. 776

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓசியா 4

1 இஸ்ரவேல் மக்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்து மக்களோடு யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும், இரக்கமும், தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. 2 பொய் சத்தியம் செய்து, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்செய்து, மீறிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது. 3 இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் துவண்டுபோகும்; கடலின் உயிரினங்களும் வாரிக்கொள்ளப்படும். 4 ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், அவர்களைக் கடிந்துகொள்ளவும் முடியாது; உன் மக்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள். 5 ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; நான் உன் தாயை அழிப்பேன். 6 என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். 7 அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன். 8 அவர்கள் என் மக்களின் பாவத்தைச் சாப்பிட்டு, அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசிதாகமாக இருக்கிறார்கள். 9 ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். 10 அவர்கள் யெகோவாவை மதிக்காமல் இருக்கிறதினால் அவர்கள் சாப்பிட்டாலும் திருப்தியடையாமல் இருப்பார்கள்; அவர்கள் விபசாரம் செய்தாலும் பெருகாமல் இருப்பார்கள். 11 வேசித்தனமும் திராட்சைரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். 12 என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள். 13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள். 14 உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள். 15 இஸ்ரவேலே, நீ என்னைவிட்டுப் போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்திற்கு உட்படாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும், யெகோவாவுடைய ஜீவன்மேல் என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக. 16 இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல அடங்காதிருக்கிறது; இப்போது யெகோவா அவர்களை விசாலமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையச் செய்வார். 17 எப்பிராயீம் சிலைகளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. 18 அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் வழிவிலகிப்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று வெட்கமானதை நாடுகிறார்கள். 19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.

சகரியாவின் ஆட்சி கி.மு. 773

2 இராஜாக்கள் 15:8–12

8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து, 9 தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை. 10 யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். 11 சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 12 உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று யெகோவா யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.

சல்லூமின் ஆட்சி கி.மு. 772

2 இராஜாக்கள் 15:13–15

13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருட ஆட்சியில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான். 14 காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். 15 சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

மெனாகேமின் ஆட்சி

2 இராஜாக்கள் 15:16–22

16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.

17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் ஆளுகை வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 18 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான். 19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான். 20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவிற்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் சுமத்தினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான். 21 மெனாகேமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 22 மெனாகேம் இறந்தபின், அவனுடைய மகனாகிய பெக்காகியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

பெக்காகியாவின் ஆட்சி கி.மு. 768

2 இராஜாக்கள் 15:23–26

23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருட ஆட்சியில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து, 24 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை. 25 ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். 26 பெக்காகியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.