இரண்டாம் யெரொபெயாமின் மரணம்

கி.மு. 784

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 14:28

28 யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆமோஸ் 7:10–9:15

10 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. 11 யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். 12 அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. 13 பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான். 14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன். 15 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார். 16 இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே. 17 இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

8:1 பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது. 2 அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். 3 அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி: 5 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும், 6 நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள். 7 அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். 8 இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? 9 அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி, 10 உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 12 அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள். 13 அந்த நாளிலே அழகுள்ள கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். 14 தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

9:1 ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை. 2 அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; 3 அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். 4 அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். 5 சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். 6 அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். 7 இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? 8 இதோ, யெகோவாகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். 9 இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை. 10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள்.

11 ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக, 12 அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார். 13 இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார். 14 என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள். 15 அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.

2 இராஜாக்கள் 14:29

29 யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.