பகுதி 11: யோதாமின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

கி.மு. 758

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 15:32

32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான்.

2 நாளாகமம் 27:1–2

1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள். 2 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல யெகோவாவின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

2 இராஜாக்கள் 15:35

35 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்; இவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.

மீகா 1–2

1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.

2 அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார். 3 இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். 4 மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். 5 இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? 6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். 7 அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.

8 இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். 9 அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது. 10 அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. 11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது. 12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. 13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது. 14 ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும். 15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் அதுல்லாம் வரை வருவார்கள். 16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.

2:1 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி, 2 வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ, 3 ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம். 4 அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள். 5 யெகோவாவின் சபையில் நிலங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். 6 தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், இந்தவிதமாக அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் பழிச்சொல் நீங்காதே. 7 யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, யெகோவாவின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? 8 என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள். 9 என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். 10 எழுந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை அழித்துவிடும், அந்த நாசம் மிகவும் கொடியதாக இருக்கும். 11 மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான். 12 யாக்கோபின் மக்களே, உங்களெல்லோரையும் நான் நிச்சயமாகக் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாகச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன், தன் தொழுவத்திற்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமமாக மக்கள் கூட்டத்தினாலே இரைச்சல் உண்டாகும். 13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்களுடைய தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், யெகோவா அவர்களுக்கு முன்பாக நடந்துபோவார்.

2 நாளாகமம் 27:3–9

3 அவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான். 4 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். 5 அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள். 6 யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான். 7 யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 9 யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:37

37 அந்நாட்களிலே யெகோவா சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் மகனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.

2 இராஜாக்கள் 15:33–34

33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள். 34 அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.

2 இராஜாக்கள் 15:36

36 யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 15:38

38 யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

இஸ்ரவேலின் ராஜ்யம்

பெக்காவின் ஆட்சி

2 இராஜாக்கள் 15:27–29

27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருட, ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து, 28 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை. 29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.