இரண்டாம் ஆலயத்தைக் குறித்த எசேக்கியேலின் தரிசனம் (continued)
கி.மு. 574
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. 2 அவர் என்னை வடக்கு வாசல் வழியாகப் புறப்படச்செய்து, என்னை வெளியிலே கிழக்கு திசைக்கு எதிரான வெளிவாசல்வரை சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபக்கத்திலிருந்து பாய்கிறதாக இருந்தது. 3 அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது. 4 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாக இருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாக இருந்தது. 5 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாக இருந்தது; தண்ணீர் நீச்சல் ஆழமும் கடக்கமுடியாத நதியுமாக இருந்தது. 6 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார். 7 நான் நடந்துவரும்போது, இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான மரங்கள் இருந்தது. 8 அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், வனாந்திரவழியாக ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். 9 நடந்தது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் வாழும் உயிரினங்கள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடம் எங்குமுள்ள யாவும் ஆரோக்கியமடைந்து பிழைக்கும். 10 அப்பொழுது என்கேதி துவங்கி எனெக்லாயிம்வரை மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற இடமாக இருக்கும்; அதின் மீன்கள் மத்திய தரைக் கடலின் மீன்களைப்போலப் பல வகையான மீன்கள் ஏராளமுமாக இருக்கும். 11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய சதுப்பு பகுதிகளும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும். 12 நதியோரமாக அதின் இக்கரையிலும் அக்கரையிலும் சாப்பிடுவதற்கான எல்லாவித மரங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் பழங்கள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுபழங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் பழங்கள் சாப்பிடுவதற்கும், அவைகளின் இலைகள் உதிர்ந்து போகாது.
13 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு. 14 சகோதரனுடன் சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்; அதை உங்களுடைய தகப்பன்மார்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்துக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும். 15 தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் மத்திய தரைக் சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற, 16 ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையுடன் சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. 17 அப்படியே மத்திய தரைக் கடலிலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடக்கு மூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடக்கு பக்கம். 18 கிழக்கு பக்கத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்திற்கும், நடுவாகவும் கிழக்கு கடல்வரை இருக்கும் எல்லையாக அளப்பீர்களாக; இது கிழக்கு பக்கம். 19 தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை மத்திய தரைக் கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம். 20 மேற்கு பக்கம் அந்த எல்லை துவங்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேரும்வரை இருக்கிற மத்திய தரைக் கடலே; இது மேற்கு பக்கம். 21 இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக. 22 உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சொந்தமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் மக்களில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களுடன் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சொத்திற்கு உடன்படுவார்களாக. 23 அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
48:1 கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும், 2 தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும், 3 ஆசேரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை நப்தலிக்கு ஒரு பங்கும், 4 நப்தலியின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை மனாசேக்கு ஒரு பங்கும், 5 மனாசேயின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், 6 எப்பிராயீமின் எல்லையருகே கிழக்கு திசை துவங்கி மேற்கு திசைவரை ரூபனுக்கு ஒரு பங்கும், 7 ரூபனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக. 8 யூதாவின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரம் கோல் அகலமும், கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. 9 இதிலே யெகோவாவுக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக. 10 வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. 11 இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும். 12 அப்படியே தேசத்தில் அர்ப்பணிக்கப்படுகிறதிலோ மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக. 13 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர்கள் அடையும் பங்கு இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; நீளம் இருபத்தைந்தாயிரம் கோலும், அகலம் பத்தாயிரம் கோலுமாக இருப்பதாக. 14 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. 15 இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும். 16 அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம். 17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும். 18 பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பத்தாயிரம் கோலும் மேற்கே பத்தாயிரம் கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக இருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக வேலை செய்கிறவர்களுக்கு ஆகாரமாக இருப்பதாக. 19 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள். 20 அர்ப்பணிக்கப்பட்ட நிலம் அனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், இருபத்தைந்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; பட்டணத்தின் நிலம் உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலம் சதுரமாக இருக்கவேண்டும். 21 பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கே மத்திய கடல் எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும். 22 அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது. 23 மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை பென்யமீனுக்கு ஒரு பங்கும், 24 பென்யமீன் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை சிமியோனுக்கு ஒரு பங்கும், 25 சிமியோனின் எல்லை அருகே கிழக்குதிசை துவக்கி மேற்கு திசைவரை இசக்காருக்கு ஒரு பங்கும், 26 இசக்காரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை செபுலோனுக்கு ஒரு பங்கும், 27 செபுலோனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருக்கட்டும். 28 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் வரையும் மத்திய தரைக் கடல்வரைக்கும் போகும். 29 சொந்தமாக்கிக்கொள்ளும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
30 நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். 31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும். 32 கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 33 தெற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 34 மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 35 சுற்றிலும் அதின் அளவு பதினெட்டாயிரம் கோலாகும்; அந்த நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.