இரண்டாம் ஆலயத்தைக் குறித்த எசேக்கியேலின் தரிசனம் (continued)

கி.மு. 574

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 45–46

1 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் யெகோவாவுக்கென்று பிரித்து வைக்கவேண்டும்; இது தன்னுடைய சுற்றுப்பரப்புள்ள எங்கும் பரிசுத்தமாக இருக்கும். 2 இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நான்குசதுரமும் அளக்கப்படவேண்டும்; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும். 3 இந்த அளவு உட்பட இருபத்தைந்தாயிரம் கோல் நீளத்தையும் பத்தாயிரம் கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும். 4 தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது யெகோவாவுக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியர்களுக்கு உரியது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்திற்கு அருகிலுள்ள இடமுமாக இருக்கவேண்டும். 5 பின்னும் இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரர்களாகிய லேவியர்களுக்கு உரியதாக இருக்கும்; அது அவர்களுடைய உடைமை; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும். 6 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் இடமாக ஐயாயிரம் கோல் அகலத்தையும் இருபத்தைந்தாயிரம் கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் சொந்தமாக இருக்கும். 7 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் இடத்திற்கும் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், பரிசுத்தப் படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் இடத்திற்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்கு பக்கமாகவும் கிழக்கிலே கிழக்கு பக்கமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேற்கு எல்லை துவக்கிக் கிழக்கு எல்லைவரை பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராக இருக்கவேண்டும். 8 இது அவனுக்கு இஸ்ரவேலிலே சொத்தாக இருக்கட்டும்; என்னுடைய அதிபதிகள் இனி என்னுடைய மக்களை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி விட்டுவிடுவார்களாக. 9 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் விட்டு, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்களுடைய பலவந்தங்களை என்னுடைய மக்களை விட்டு அகற்றுங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 10 உண்மையான எடை காட்டும் தராசும், சரியான அளவுள்ள மரக்காலும், சரியான அளவுள்ள குடமும் உங்களுக்கு இருக்கட்டும். 11 மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாக இருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும். அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கவேண்டும்; கலத்தின்படியே அதின் அளவு நிர்ணயிக்கப்படுவதாக. 12 சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

13 நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறில் ஒருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பங்கையும் படைக்கவேண்டும். 14 அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளை: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும். 15 இஸ்ரவேல் தேசத்திலே நல்ல மேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக உணவுபலியாகவும், தகனபலியாகவும், சமாதானபலியாகவும் செலுத்தப்படவேண்டுமென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16 இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் மக்களெல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாக இருக்கிறார்கள். 17 இஸ்ரவேல் மக்கள் கூடிவர குறிக்கப்பட்ட எல்லா பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வு நாட்களிலும் தகனபலிகளையும் உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாக இருக்கும்; அவன் இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவாரணம் செய்வதற்கு பாவநிவாரணபலியையும் உணவுபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக. 18 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாம் நாளிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. 19 பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்தின் வாசல் நிலைகளிலும் பூசுவானாக. 20 பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாம் நாளிலும் செய்வாயாக; இந்த விதமாக ஆலயத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. 21 முதலாம் மாதம் பதினான்காம் நாளிலே புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற ஏழுநாட்கள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். 22 அந்த நாளிலே அதிபதி தனக்காக தேசத்து எல்லா மக்களுக்காகவும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. 23 ஏழுநாட்கள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாட்களும் அனுதினமும் யெகோவாவுக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் அனுதினமும் படைப்பானாக. 24 ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவுமான உணவுபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. 25 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாட்களும் அதற்கு இணையானபடி பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும், உணவுபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.

46:1 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும். 2 அப்பொழுது இளவரசன் வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, வாசற்படி அருகில் நிற்கவேண்டும்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கவேண்டும்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருப்பதாக. 3 தேசத்து மக்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆராதனை செய்யவேண்டும். 4 அதிபதி ஓய்வுநாளிலே யெகோவாவுக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே. 5 ஆட்டுக்கடாவுடன் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் உணவுபலியாகத் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும். 6 மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு, 7 உணவுபலியாக இளங்காளையுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாக, ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும். 8 இளவரசன் வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும். 9 தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக. 10 அவர்கள் உள்ளே நுழையும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களுடன் உள்ளே நுழைந்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படவேண்டும். 11 பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும். 12 இளவரசன் உற்சாகமான தகனபலியையோ, சமாதான பலிகளையோ யெகோவாவுக்கு உற்சாகமாகச் செலுத்த வரும் போது, அவனுக்குக் கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் திறக்கப்படவேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன்னுடைய தகனபலியையும் தன்னுடைய சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படவேண்டும்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும். 13 தினந்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைக்கவேண்டும்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும். 14 அதினோடு காலைதோறும் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறிலொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படி ஒருபடி எண்ணெயிலே மூன்றிலொரு பங்கையும் படைக்கவேண்டும்; இது அன்றாடம் யெகோவாவுக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான உணவுபலி. 15 இப்படிக் காலைதோறும் அனுதின தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் உணவுபலியையும் எண்ணெயையும் செலுத்தவேண்டும். 16 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இளவரசன் தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும். 17 அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும். 18 இளவரசனானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும். 19 பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது. 20 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும், உணவுபலியையும் ஆசாரியர்கள் வெளிமுற்றத்திலே கொண்டுபோய் மக்களைப் பரிசுத்தம்செய்யாதபடி, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம் இதுவே என்றார். 21 பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது. 22 முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது. 23 இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது. 24 அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.