எகிப்துக்கு எதிரான எசேக்கியேலின் கடைசித் தீர்க்கதரிசனம்

எகிப்துக்கு எதிரான கடைசி முன்னறிவிப்பு.

கி.மு. 572

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 29:17–30:19

17 பாபிலோனின் சிறையிருப்பின் இருபத்தேழாம்வருடம் முதலாம் மாதம் முதலாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன்னுடைய சேனையினிடத்தில் கடும் வேலை வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையானது; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த வேலையினால் அவனுக்கோ அவனுடைய சேனைக்கோ கூலி கிடைக்கவில்லை. 19 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான மக்களைச் சிறைபிடித்து அதின் செல்வத்தைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாக இருக்கும். 20 அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 21 அந்த நாளிலே நான் இஸ்ரவேல் மக்களின் கொம்பை முளைக்கச்செய்து, அவர்களுடைய நடுவிலே தாராளமாகப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.

30:1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள். 3 நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம். 4 வாள் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலை செய்யப்படுகிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான மக்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் பாழாக்கப்படும். 5 எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள். 6 எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 7 பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும். 8 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். 9 இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது. 10 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன். 11 இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள். 12 அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். 13 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி, 14 பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து, 15 எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன். 16 எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும். 17 ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள். 18 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தகபானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள். 19 இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.