நெருங்கிய உறவினருடன் தகாத பாலுறவு கொண்டவனை வெளியேற்றுங்கள்
நெருங்கிய உறவினருடன் தகாத பாலுறவு கொண்டவனைச் சபையிலிருந்து வெளிப்படையாக நீக்கும்படி பவுல் கட்டளையிடுகிறார். இந்தக் கொடுமையைப் பொறுத்துக்கொண்ட அவர்களுடைய கள்ளப் போதகரின் அறிவைக் குறித்து அவர்கள் பெருமைபாராட்டுவதைக் கண்டிக்கிறார்; பாவத்தைப் புளித்த மாவுடன் ஒப்பிட்டு அது எவ்வாறு பரவுகிறது என்பதைக் காட்டுகிறார். வெளிப்படையாகத் தேவபக்தியின்றி வாழும் கிறிஸ்தவர்களுடன் பழகுவது அவர்களுக்குத் தடைசெய்யப்படுகிறது; அத்தகையவர்கள் சபையின் கண்டனத்திற்கு ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் சபைக்கு வெளியே இருக்கும் தீய பிறமதத்தவர்களைத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும்.
கி.பி. 57
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே. 2 இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன். 4 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது, 5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா? 7 ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. 8 ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம். 9 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். 10 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. 11 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. 12 சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? 13 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
பிறமதத்தவர்களின் நீதிமன்றங்களில் வழக்குகள்
இவ்வுலகை ஆளுவதற்கான சட்டங்களை வழங்கிய, தேவனால் ஏவப்பட்ட தங்கள் போதகர்களிடம் தகராறுகளைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, பிறமதத்தவர்களின் நீதிமன்றங்களுக்கு அவற்றை எடுத்துச்சென்று தங்கள் கிறிஸ்தவ விசுவாச அறிக்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதற்காகக் கிறிஸ்தவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு அநீதி செய்யவும் அவர்களை ஏமாற்றவும் முயல்வதற்காகவும் அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள்.
1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன? 2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா? 3 நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இந்த வாழ்க்கைக்குரியவைகளை நீங்கள் நியாயந்தீர்த்துக்கொள்ளமுடியாதிருக்கிறது எப்படி? 4 இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாக எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். 5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவன்கூட உங்களுக்குள் இல்லையா? 6 சகோதரனோடு சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச்செய்கிறான். 7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எல்லாவிதத்திலும் குற்றமாக இருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? 8 நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; உங்கள் சகோதரர்களுக்கும் அப்படிச் செய்கிறீர்களே.
ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துவதைப் பவுல் மறுக்கிறார்
ஆடம்பரத்தையும் பாலியல் ஒழுக்கக்கேட்டையும் அங்கீகரித்ததாகத் தோன்றும் கள்ளப் போதகரின் வாதங்களைப் பவுல் இங்கே மறுத்து, அசுத்தமான எவரும் நற்செய்தியின் ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க முடியாது என்று அறிவிக்கிறார். படைப்பினாலும் மீட்பினாலும் தேவனுக்குச் சொந்தமான கிறிஸ்தவர்கள், இயல்பாகவே அனுமதிக்கப்பட்ட காரியங்களில்கூட அளவுக்கு மீறி ஈடுபடுவது பாவமாகும்.
9 அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும், 10 திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள்; ஆனாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவ ஆவியானவராலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13 வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியச்செய்வார். சரீரமோ வேசித்தனத்திற்கு அல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தர் சரீரத்திற்குரியவைகளைத் தந்தருளுவார். 14 தேவன் கர்த்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். 15 உங்களுடைய சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யக்கூடாதே. 16 வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. 17 அப்படியே கர்த்தரோடு இணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாக இருக்கிறான். 18 வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள். மனிதன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்கு வெளியே இருக்கும்; வேசித்தனம் செய்கிறவனோ தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாகப் பாவம் செய்கிறான். 19 உங்களுடைய சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா? 20 விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
திருமணமானவர்களுக்கும் திருமணமாகாதவர்களுக்கும் விதிமுறைகள்
பவுல் தொடர்ந்து கொரிந்தியர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். அவர்களுடைய வெவ்வேறு மன இயல்புகளுக்கும், துன்புறுத்தல் காலத்தில் சபையின் தற்போதைய நிலைக்கும் ஏற்ப, திருமணமானவர்களுக்கும் திருமணமாகாதவர்களுக்கும் நடத்தை விதிமுறைகளை வழங்குகிறார்.
1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. 2 ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். 3 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். 4 மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள். 6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். 7 எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. 8 திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும். 9 ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது. 10 திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது. 11 பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது. 12 மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 13 அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 14 ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். 15 ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 16 மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? 17 தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன்.