கிறிஸ்தவம் வாழ்க்கை உறவுகளை மாற்றாமல் விடுகிறது

வாழ்க்கையின் வழக்கமான உறவுகளிலும் இயல்பான கடமைகளிலும் கிறிஸ்தவம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று பவுல் போதிக்கிறார்.

கி.பி. 57

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 கொரிந்தியர் 7:18–24

18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. 19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம். 20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும். 21 அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய். 22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள். 24 சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.

கன்னியரும் விதவைகளும் திருமணம் செய்யாமல் இருக்க அறிவுரை

துன்புறுத்தல் காலங்களில் கன்னியரும் விதவைகளும் திருமணம் செய்யாமல் இருக்கும்படி பவுல் அறிவுறுத்துகிறார். வாழ்க்கையின் தற்போதைய கவலைகளையும் இன்பங்களையும் பற்றி அவர்கள் குறைவாகக் கவலைப்படும்படி, வாழ்க்கை எவ்வளவு குறுகியதும் முக்கியத்துவமற்றதுமாக இருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

1 கொரிந்தியர் 7:25–40

25 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். 26 அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். 27 நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. 28 நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன். 29 மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும், 30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும், 31 இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 32 நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 33 திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 34 அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். 35 இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். 36 ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். 37 ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். 38 இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். 39 மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். 40 ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவும் பலவீனமானவர்களும்

மனந்திரும்பியவர்களுக்குப் பதிலளிக்கும் பவுல், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பது தன்னளவில் நன்மையோ தீமையோ இல்லாததாக இருந்தாலும், அந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று போதிக்கிறார். ஏனெனில், அவர்களுடைய முன்மாதிரி பலவீனமான சகோதரர்கள் தங்கள் விக்கிரகம் உண்மையான தெய்வம் என்று நினைக்க ஊக்குவித்து, அவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தக்கூடும்.

1 கொரிந்தியர் 8

1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும். 2 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை. 3 தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். 4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், 6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம். 7 ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது. 8 உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. 9 ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள். 10 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா? 11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. 12 இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள். 13 ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன்.