தேசங்களுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
அண்டை தேசங்கள்மீதும் இஸ்ரவேல் மற்றும் யூதாமீதும் நியாயத்தீர்ப்பை ஆமோஸ் அறிவிக்கிறார்.
கி.மு. 793
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள். 2 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும். 3 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே. 4 ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும். 5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே. 7 காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும். 8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே. 10 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார். 11 மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. 12 தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 13 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. 14 ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும். 15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
2:1 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. 2 மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். 3 நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 4 மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. 5 யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். 6 மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே. 7 அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள். 8 அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 9 நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, 10 நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி, 11 உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார். 12 நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள். 13 இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன். 14 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை. 15 வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை. 16 பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார்.
3:1 இஸ்ரவேல் மக்களே, யெகோவாகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாகச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். 2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். 3 இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ? 4 தனக்கு இரை அகப்படாமல் இருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடிக்காமல் இருக்கும்போது பாலசிங்கம் தன்னுடைய குகையிலிருந்து சத்தமிடுமோ? 5 குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல் இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? 6 ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? 7 யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார். 8 சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? யெகோவாகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? 9 நீங்கள் சமாரியாவின் மலைகளில் கூடிவந்து, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரண்மனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரண்மனைகள்மேலும் கூறுங்கள். 10 அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 11 ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்; அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள் கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 12 மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையோ ஒரு காதின் துண்டையோ சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிப்பதைப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மெத்தையின் மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 13 நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், 14 நான் இஸ்ரவேலுடைய பாவங்களுக்காக அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையிலே விழும். 15 மழைகாலத்து வீட்டையும் கோடைக்காலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
4:1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். 3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி, 5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 6 ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 7 இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது. 8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 9 நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 10 எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 12 ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. 13 அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.