இஸ்ரவேலின் ராஜ்யம்
இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சியின் நிறைவு
கி.மு. 809
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
25 காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் மகன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்வரை உள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 26 இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார். 27 இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.
ஓசியா இஸ்ரவேலுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் கி.மு. 801
பத்து கோத்திரங்களுக்கு ஓசியாவின் முதல் வேண்டுகோள்.
1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம்.
2 யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். 3 அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். 4 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். 5 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். 6 அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். 7 யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார். 8 அவள் லோருகாமாவை பால்மறக்கச்செய்தபிறகு, கர்ப்பமடைந்து ஒரு மகனைப் பெற்றாள். 9 அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை. 10 என்றாலும், இஸ்ரவேல் மக்களின் தொகையை அளக்கவும் எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் மக்களல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 11 அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும்.
2:1 உங்கள் சகோதரர்களைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். 2 உங்கள் தாயுடன் வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் தன் விபச்சாரச்செயலை தன் முகத்திலிருந்தும், தன் விபசாரங்களைத் தன் இருப்பிடத்தின் நடுவிலிருந்தும் விலக்கிப்போடவேண்டும். 3 இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்கி, அவள் பிறந்தநாளில் இருந்ததுபோல அவளை நிறுத்தி, அவளை வெட்டவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகச்செய்வேன்; 4 அவளுடைய பிள்ளைகள் விபச்சாரப்பிள்ளைகளானதால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன். 5 அவர்களுடைய தாய் விபச்சாரம்செய்தாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இழிவான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுரோமத்தையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நாயகர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள். 6 ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன். 7 அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். 8 தனக்கு நான் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகச்செய்தவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக மாற்றினார்கள். 9 ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சைரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுரோமத்தையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன். 10 இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. 11 அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியச்செய்வேன். 12 என் நேசர்கள் எனக்குக் கொடுத்த கூலி என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சைச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாக்கிப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைச் சாப்பிடும். 13 அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களுக்காக அவளை விசாரிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 14 ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி, 15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோர் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். 16 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார். 17 பாகால்களுடைய பெயர்களை அவள் வாயிலிருந்து அகற்றிப்போடுவேன்; இனி அவைகளின் பெயரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைவும் இல்லாமற்போகும். 18 அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன். 19 நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். 20 உண்மையாகவே உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ யெகோவாவை அறிந்துகொள்வாய். 21 அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும். 22 பூமி தானியத்திற்கும், திராட்சைரசத்திற்கும், எண்ணெய்க்கும் பதில்கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் பதில் கொடுக்கும். 23 நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
3:1 பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார். 2 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி, 3 அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். 4 இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள். 5 பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.