தேசங்களுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் (continued)

அண்டை தேசங்கள்மீதும் இஸ்ரவேல் மற்றும் யூதாமீதும் நியாயத்தீர்ப்பை ஆமோஸ் அறிவிக்கிறார்.

கி.மு. 793

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆமோஸ் 5:1–7:9

1 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள். 2 இஸ்ரவேல் என்னும் கன்னிப்பெண் விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன்னுடைய தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளைத் தூக்கிவிடுகிறவர்கள் இல்லை. 3 நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று யெகோவாகிய தேவன் சொல்லுகிறார். 4 யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள். 5 பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலிலும் சேராதீர்கள், பெயெர்செபாவுக்கும் போகாதீர்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான இடமாகவும் போகும். 6 யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும். 7 நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள். 8 அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். 9 பாதுகாப்பான இடத்தின்மேல் அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாக இலகுவடையச் செய்கிறவர். 10 பட்டணத்தின் நுழைவுவாயிலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாகப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். 11 நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. 12 உங்களுடைய மீறுதல்கள் மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின் நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். 13 ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம் தீமையான காலம். 14 நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார். 15 நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். 16 ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். 17 எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

18 யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும். 19 சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். 20 யெகோவாவுடைய நாள் வெளிச்சமாக இல்லாமல், இருளும் பிரகாசமற்ற காரிருளுமாக இருக்குமல்லவோ? 21 உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. 22 உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன். 23 உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். 24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும். 25 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? 26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே. 27 ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார்.

6:1 சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ, 2 நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள். 3 தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து, 4 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 5 தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, 6 பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள். 7 ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

8 நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 9 ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். 10 அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான். 11 இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார். 12 கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள். 13 நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். 14 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

7:1 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். 2 அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன். 3 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். 4 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது. 5 அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன். 6 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். 7 பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது. 8 யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். 9 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார்.