விருத்தசேதனம் செய்யப்படுவதற்கு முன்பே ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டார்

ஆபிரகாம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் நீதிமானாக்கப்படவில்லை என்பதைப் பவுல் நிரூபிக்கிறார். அவர் பெருமைபாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. அவர் விசுவாசத்தினாலும் கிருபையினாலும் தயவினாலும் நீதிமானாக்கப்பட்டார்; அவருடைய கிரியைகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடனாகவோ வெகுமதியாகவோ அது கொடுக்கப்படவில்லை. நீதிமானாக்கப்படும் இதே வழியைக்குறித்துத் தாவீதும் சாட்சி கூறுகிறார். ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்படாத நிலையிலேயே நீதிமானாக்கப்பட்டதும், பின்னர் விசுவாசத்தினால் தாம் நீதிமானாக்கப்பட்டதன் முத்திரையாக விருத்தசேதனத்தின் அடையாளத்தைப் பெற்றதும் இதைக் காட்டுகின்றன. விசுவாசம் மட்டுமே என்ற ஒரே நிபந்தனையின்படி நீதிமானாக்கப்படுவதற்குச் சம உரிமையுடைய யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் அவர் ஆவிக்குரிய தகப்பனாகும்படி இவ்வாறு நடந்தது.

கி.பி. 58

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ரோமர் 4:1–12

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்? 2 ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது. 3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது. 4 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும். 5 ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 6 அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:

7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ,

எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே. 10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே. 11 மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும், 12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் யூதரல்லாதோரையும் உள்ளடக்குகிறது

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமே, அவருடைய விசுவாசத்தின் வழியாக உலகம் முழுவதும் அவருடைய சுதந்தரவாளிகளாகும் என்பதைக் காட்டியது என்று யூதர்களுக்கு அறிவித்துப் பவுல் தமது வாதத்தைத் தொடர்கிறார். ஆனால் யூதர்கள் மட்டுமே அவருடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாக வேண்டுமென்றால், விசுவாசம் வீணாக்கப்படுகிறது; விசுவாசம் என்ற நிபந்தனையின்படி கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமும் ரத்தாகிறது. ஏனெனில் நியாயப்பிரமாணம் இரக்கமின்றிப் பாவியைத் தண்டனைக்கு உட்படுத்துகிறது; நியாயப்பிரமாணம் இல்லாமல் கடமையை வரையறுக்கும் விதி இருக்க முடியாது, ஆகவே பாவமும் இருக்க முடியாது. இதனால்தான் வாக்குத்தத்தம் விசுவாசத்திற்குக் கொடுக்கப்படுகிறது; தேவனுடைய இலவச கிருபை ஆபிரகாமின் மாம்சத்தின்படியான பிள்ளைகளையும் ஆவிக்குரிய பிள்ளைகளையும் உள்ளடக்குகிறது. ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் நீதிமானாக்கப்பட்டது, யூதரல்லாதோர் ஏற்றுக்கொள்ளப்படுவதை நிரூபிக்கிறது. பல தேசங்களின் தகப்பனாக ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தமே, மீட்பின் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் யூதரல்லாதோர் உரிமையுடையவர்கள் என்பதை நிலைநாட்டுகிறது.

ரோமர் 4:13–22

13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 14 நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும். 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை. 16 எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது. 17 “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான். 18 “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான். 19 அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான். 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான். 22 எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

நமக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஆபிரகாமின் விசுவாசம்

ஆபிரகாம் விசுவாசத்தினால் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது நமக்காகப் பதிவுசெய்யப்பட்டது. நமது பாவங்களுக்காகத் துன்பப்பட்டு, நாம் ஒப்புரவாக்கப்படுவதற்கு, அல்லது நீதிமானாக்கப்படுவதற்கு, உத்தரவாதமாக உயிர்த்தெழுந்த அவருடைய குமாரனில் விசுவாசம் வைப்பதே தேவனிடத்தில் இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரே வழி என்பதை இது நமக்குக் காட்டுகிறது.

ரோமர் 4:23–25

23 “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

நீதிமானாக்கப்படுவதைத் தொடர்ந்து வரும் ஆசீர்வாதங்கள்

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவதைத் தொடர்ந்து வரும் பெரும் ஆசீர்வாதங்களையும் சிறப்புரிமைகளையும் பவுல் தொடர்ந்து பட்டியலிடுகிறார். யூதரல்லாதோருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர், அவர்கள்மீதுள்ள தேவனுடைய அன்பைக் காட்டுகிறார்; அவர்கள் இன்னும் பிற தெய்வங்களை வழிபடுகிறவர்களாக இருந்தபோதே கிறிஸ்து அவர்களுக்காக மரித்தது அந்த அன்பை உறுதிப்படுத்துகிறது. ஆகவே, ஆபிரகாமின் மாம்சத்தின்படியான சந்ததியாரைப்போலவே, யூதரல்லாதோருக்கும் கிறிஸ்துவின்மூலம் இரட்சிப்பைப் பெறும் அதே நம்பிக்கையும் தேவனில் மகிழ்வதற்கான அதே ஆதாரங்களும் உள்ளன; ஏனெனில் அவர்களும் அதே பாவநிவாரணத்தினால் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரோமர் 5:1–11

1 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். 3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 10 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே. 11 அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.

ஆதாமின்மூலம் பிறவிப்பாவம், கிறிஸ்துவின்மூலம் ஜீவன்

பவுல் இப்போது பிறவிப்பாவம் பற்றிய போதனையை எடுத்துரைக்கிறார். ஒரே மனிதனுடைய மீறுதலால் பாவம் உலகத்தில் நுழைந்ததையும், அதன்பின் அனைவரும் பாவ இயல்புடன் பிறந்ததால் மரணத்தீர்ப்பு எல்லா மனிதர்களுக்கும் வந்ததையும் அவர் காட்டுகிறார். மோசேயின் நியாயப்பிரமாணம் அறியப்படுவதற்கு முன்பே நமது இயல்பின் சீர்கேட்டினால் மரணம் ஆட்சிசெய்தது. மனிதகுலத்தின் முன்னடையாளமும் பூமிக்குரிய தலைவருமான ஆதாம் பாவத்தைக் கடத்தினார். அந்த முன்னடையாளத்தின் நிறைவேறுதலும் ஆவிக்குரிய தலைவருமான கிறிஸ்து அனைவருக்கும் ஜீவனையும் நீதிமானாக்கப்படுதலையும் அளித்தார். ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவுகளைவிடக் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் விளைவுகள் மேலானவை. ஒரே குற்றத்தினால் ஆதாம் மீறுதலையும் மரணத்தையும் உலகத்திற்குள் கொண்டுவந்தார். கிறிஸ்து தமது கீழ்ப்படிதலினால் பாவத்தின் தீமையை நீக்கி, விசுவாசத்தின் நீதியின்மூலம் மனிதகுலம் முழுவதற்கும் ஜீவன் என்னும் இலவச ஈவையும், மனிதரின் குற்றங்களான பிறவிப்பாவத்திற்கும் செயலால் செய்யும் பாவத்திற்கும் மன்னிப்பையும் மீண்டும் அளித்தார். பாவத்தின் குற்றத்தைப் பற்றிய அறிவைக் கொடுப்பதற்காக நியாயப்பிரமாணம் வந்தது. நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து நம்மை விடுவிக்க தேவனுடைய கிருபையும் ஈவும் நிரம்பிவழிகின்றன. பாவம் அனைவர்மீதும் ஆட்சிசெய்து, மனிதகுலம் முழுவதையும் ஆவிக்குரிய மரணத்திற்கும் பூமிக்குரிய மரணத்திற்கும் உட்படுத்தியதுபோல, தேவனுடைய கிருபையும் ஆட்சிசெய்து, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பரிசுத்தத்தை உண்டாக்கும்.

ரோமர் 5:12–21

12 இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது. 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன். 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது. 16 மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது. 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே. 18 எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது. 19 அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது. 21 ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது.