பகுதி 3: பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்படாத யூதர்

ஆலயத்தின் அழிவுக்குப் பின், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்படாத யூத மக்களின் ஒரு பகுதியினருடைய வரலாறு.

இந்தப் பகுதியின் சுருக்கமான பதிவு

இந்தப் பகுதியில் சொல்லப்படும் நிகழ்வுகளின் சுருக்கமான பதிவு.

கி.மு. 588

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 25:23–26

23 பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல படைத்தலைவர்களும் அவர்களுடைய வீரர்களும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவிடம் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தானியாவின் மகன் இஸ்மவேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய மகன் யசனியாவும் அவர்களுடைய மனிதர்களுமே. 24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனிதர்களுக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயர்களின் ஆளுகைக்கு உட்பட பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவிற்குக் கீழ்ப்பட்டிருங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான். 25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகன் இஸ்மவேல் பத்து மனிதர்களோடு வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதர்களையும், கல்தேயர்களையும் வெட்டிக் கொன்றுபோட்டான். 26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய மக்கள் அனைவரும் படைத்தலைவர்களும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

கெதலியா யூதேயாவின் ஆளுநராக நியமிக்கப்படுதல்

ஆலயத்தின் அழிவுக்குப் பின், நேபுகாத்நேச்சார் கெதலியாவை யூதேயாவின் ஆளுநராக நியமிக்கிறார். எரேமியாவும் மீதமுள்ள மக்களும் கெதலியாவுடன் சேருகிறார்கள்.

2 இராஜாக்கள் 25:22

22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த மக்களின்மேல், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

எரேமியா 40:1–12

1 பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்: 2 காவற்சேனாதிபதி எரேமியாவை வரவழைத்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய யெகோவா இந்த இடத்திற்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார். 3 தாம் சொன்னபடியே யெகோவா நடப்பித்துமிருக்கிறார்; நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது. 4 இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான். 5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்திற்குத் திரும்பிப்போய், அவனுடன் மக்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்திற்குப் போக உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அவ்விடத்திற்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான். 6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான மக்களுக்குள் அவனுடன் தங்கியிருந்தான்.

7 பாபிலோன் ராஜா அகீக்காமின் மகனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகாத குடிமக்களில் ஏழைகளான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவனுடைய கண்காணிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற போர் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய மனிதரும் கேட்டபோது, 8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், கரேயாவின் மகன்களாகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் மகனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனான ஒருவனுடைய மகனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே. 9 அப்பொழுது சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனிதரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரை பணிய பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை பணியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும். 10 நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான். 11 மோவாபிலும் அம்மோன் மக்களிடத்திலும் ஏதோமிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினான் என்றும், கேட்டபோது, 12 எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.

கெதலியாவுக்கு எதிராக இஸ்மவேல் சதிசெய்தல்

எரேமியா 40:13–41:10

13 அப்பொழுது கரேயாவின் மகனாகிய யோகனானும் வெளியில் இருந்த எல்லா போர் வீரர்களும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து, 14 உம்மைக் கொன்றுபோடுவதற்கு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை. 15 பின்னும் கரேயாவின் மகனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாகப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட அனுமதிக்கவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீதியானவர்கள் அழியவும் அவன் உம்மை ஏன் கொன்றுபோடவேண்டும் என்றான். 16 ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா கரேயாவின் மகனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

41:1 பின்பு ஏழாம் மாதத்தில் ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடன் ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஒன்றாக உணவு சாப்பிட்டார்கள். 2 அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள். 3 மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட போர்வீரர்களாகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான். 4 அவன் கெதலியாவைக் கொன்றபின்பு, மறுநாளில் அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்: 5 தாடியைச் சிரைத்து, உடைகளைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் நறுமணப்பொருட்களையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள். 6 அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான். 7 அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனுடன் இருந்த மனிதரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்தில் தள்ளிப்போட்டார்கள். 8 ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலைசெய்யவேண்டாம்; கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரர்களைக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான். 9 இஸ்மவேல் கெதலியாவிற்காக வெட்டின மனிதருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்காக உண்டாக்கின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டப்பட்டப் பிரேதங்களால் நிரப்பினான். 10 பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான மக்கள் அனைவரையும் சிறைப்படுத்திக்கொண்டு போனான்; ராஜாவின் மகள்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகீக்காமின் மகனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான எல்லா மக்களையும் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் மக்களிடத்தில் போகப் புறப்பட்டான்.