யோகனான் சிறைப்பட்டவர்களை மீட்டு எகிப்துக்குத் தப்பியோடுதல்
யோகனான் இஸ்மவேலிடமிருந்து சிறைப்பட்டவர்களை மீட்கிறார். எரேமியா வழியாகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளைகளுக்கு மாறாக, அவர் எகிப்திலுள்ள தகபானேஸில் அடைக்கலம் புகுகிறார்.
கி.மு. 587
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
11 நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் கேட்டபோது, 12 அவர்கள் ஆண்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோடு போர்செய்யப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீர் அருகில் கண்டார்கள். 13 அப்பொழுது இஸ்மவேலுடனிருந்த எல்லா மக்களும் கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா போர்வீரர்களையும் கண்டு சந்தோஷப்பட்டு, 14 இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன மக்களெல்லாம் பின்வாங்கித் திரும்பி, கரேயாவின் மகனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள். 15 நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேருடன் யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் மக்களிடத்தில் போனான்.
16 கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லா போர்வீரர்களும், அகீக்காமின் மகனாகிய கெதலியாவை வெட்டிப்போட்ட நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பச்செய்ததுமான மீதியான எல்லா மக்களாகிய போர்வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், அரண்மனை அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, 17 பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக்கின கிம்காமின் மகனாகிய கெதலியாவை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதற்காக கல்தேயருக்குப் பயந்தபடியினால், 18 தாங்கள் எகிப்திற்குப் போகப்புறப்பட்டு, பெத்லெகேம் ஊருக்கு அருகிலுள்ள கிம்காமின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
42:1 அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் மகனாகிய யோகனானும், ஓசாயாவின் மகனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள எல்லா மக்களும் சேர்ந்துவந்து, 2 தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, நீர் எங்கள் விண்ணப்பத்திற்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்த எல்லா மக்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும். 3 உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான மக்களில் கொஞ்சம் நபர்களே மீதியாயிருக்கிறோம் என்றார்கள். 4 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்வேன்; யெகோவா உங்களுக்கு மறுஉத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். 5 அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருப்பாராக. 6 அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாக நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். 7 பத்துநாள் சென்றபின்பு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது. 8 அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து, 9 அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், 10 நீங்கள் இந்தத் தேசத்தில் தங்கியிருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனம் வருந்தினேன். 11 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று யெகோவா சொல்லுகிறார், உங்களைக் காப்பாற்றுவதற்காகவும், உங்களை அவன் கைக்கு விடுவிப்பதற்காகவும் நான் உங்களுடன் இருந்து, 12 அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமல், நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறதில்லையென்றும், 14 நாங்கள் போரைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், உணவு குறைவினால் பட்டினியாக இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தங்கியிருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில், 15 யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்திற்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், 16 நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்தில் உங்களைப் பிடிக்கும்; நீங்கள் சந்தேகப்படுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்துவரும். அங்கே இறப்பீர்கள். 17 எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்திற்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனிதருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பார்கள்; நான் அவர்கள்மேல் வரச்செய்யும் தீங்கினால் அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 18 என் கோபமும் என் கடுங்கோபமும் எருசலேமின் குடிமக்கள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் கடுங்கோபம் நீங்கள் எகிப்திற்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 19 யூதாவில் மீதியானவர்களே, எகிப்திற்குப் போகாதிருங்கள் என்று யெகோவா உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள். 20 உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாக உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்செய்து, எங்கள் தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு அனுப்பினீர்கள். 21 நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்தையும் கவனித்துக் கேட்காமற்போனீர்கள். 22 இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற இடத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மரணமடைவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.
43:1 எரேமியா எல்லா மக்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு, 2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும், கரேயாவின் மகனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனிதரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்தில் தங்குவதற்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய யெகோவா உன்னை எங்களிடத்திற்கு அனுப்பவில்லை. 3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் மகனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். 4 அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள். 5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும், 6 கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு, 7 யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தகபானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள்.