பார்வோனுக்கும் எகிப்துக்கும் எதிராக எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தல்

எகிப்துக்கு எதிரான ஒரு தீர்க்கதரிசனம்.

கி.மு. 589

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 29:1–16

1 பாபிலோனின் சிறையிருப்பின் பத்தாம் வருடம் பத்தாம் மாதத்தின் பன்னிரண்டாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, 4 உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். 5 உன்னையும் உன்னுடைய நதிகளின் எல்லா மீன்களையும் வனாந்திரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன். 6 அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே. 7 அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய். 8 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் வாளை வரச்செய்து, உன்னில் மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன். 9 எகிப்துதேசம் பாழும் வனாந்திரமுமாகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்: நைல் நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே. 10 ஆகையால், இதோ, நான் உனக்கும் உன்னுடைய நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்திரங்களாக்குவேன். 11 மனிதனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருடம் குடியில்லாதிருக்கும். 12 எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகச்செய்வேன்; அதின் பட்டணங்கள் வெறுமையாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருடங்கள் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன். 13 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருடங்கள் முடியும்போது, நான் எகிப்தியர்களை அவர்கள் சிதறப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு, 14 எகிப்தியர்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய பிறப்பின் தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரச்செய்வேன்; அங்கே அவர்கள் முக்கியமில்லாத ராஜ்ஜியமாக இருப்பார்கள். 15 அது இனி தேசங்களின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்ஜியங்களிலும் முக்கியமற்றதாக இருக்கும்; அவர்கள் இனி தேசங்களை ஆளாதபடி அவர்களைக் குறுகிப்போகச்செய்வேன். 16 அவர்களின் பின்னேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேலர்கள் எனக்குத் தங்களுடைய அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடி, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாக இல்லாமற்போவார்கள்; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல்: அசூரைப் போல எகிப்தும் வீழும் கி.மு. 588

எகிப்துக்கு எதிரான ஒரு தீர்க்கதரிசனம்.

எசேக்கியேல் 30:20–31:18

20 பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 21 மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை. 22 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து, 23 எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன். 24 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான். 25 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். 26 நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

31:1 பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்? 3 இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது. 4 தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது. 5 ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது. 6 அதின் கிளைகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கிளைகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டது; பெரிதான எல்லா தேசகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள். 7 அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது. 8 தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கமுடியாமல் இருந்தது; தேவதாரு மரங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு மரமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல. 9 அதின் அடர்ந்த கிளைகளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் மரங்களெல்லாம் அதின்மேல் பொறாமைகொண்டன. 10 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன்னுடைய வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன்னுடைய நுனிக்கிளையை உயர வளரச்செய்ததாலும், அதின் இருதயம் தன்னுடைய மேட்டிமையினால் உயர்ந்துபோனதினாலும், 11 நான் அதைத் தேசங்களில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு விருப்பமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்திற்காக அதைத் தள்ளிப்போட்டேன். 12 தேசங்களில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள். 13 விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கினது; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின. 14 தண்ணீரின் ஓரமாக வளருகிற எந்த மரங்களும் தங்களுடைய உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்களுடைய கொப்புகளின் தழைக்குள்ளே தங்களுடைய நுனிக்கிளையை உயர வளரவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்களுடைய உயரத்தினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்படி இப்படிச் செய்வேன்; மனிதகுமாரர்களின் நடுவே அவர்கள் எல்லோரும் குழியில் இறங்குகிறவர்களுடன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள். 15 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. 16 நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. 17 அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். 18 இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.