சிறையிருப்பு நிச்சயம் என்பதற்கான எச்சரிக்கைகள் (continued)

யூதர்களின் சிறையிருப்பும் எருசலேமின் அழிவும் நிச்சயம் என்று அறிவிக்கும் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் யூதர்களுக்கான வேண்டுகோள்களும்.

கி.மு. 609

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரேமியா 18–19

1 யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 3 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான். 4 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான். 5 அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: 6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். 7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே, 8 நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன். 9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. 10 அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன். 11 இப்பொழுதும், நீ யூதாவின் மனிதரையும் எருசலேமின் குடிமக்களையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தைத் திட்டமிடுகிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்துங்களென்று யெகோவா உரைக்கிறாரென்று சொல். 12 ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள். 13 ஆகையால் யெகோவா சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள். 14 லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ? 15 என் மக்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; ஒழுங்குபடுத்தப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களை முந்தின பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. 16 நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான். 17 கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார். 18 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள். 19 யெகோவாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும். 20 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய கடுங்கோபத்தை அவர்களை விட்டுத்திருப்புவதற்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும். 21 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்திற்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளையில்லாதவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் கணவன்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் போரில் பட்டயத்தால் மடியக்கடவர்கள். 22 நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே. 23 ஆனாலும் யெகோவாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும்.

19:1 யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு, 2 கிழக்கு வாசலுக்கு முன்பான இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கில் புறப்பட்டுப்போய், நான் உன்னுடன் சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து. 3 நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, யெகோவாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: இதோ, நான் இந்த இடத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரச்செய்வேன்; அதைக் கேட்கிற அனைவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 4 அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும், 5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. 6 ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த இடம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும். 7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த இடத்தில் வெறுமையாக்கி, அவர்கள் எதிரிகளுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழச்செய்து, அவர்கள் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து, 8 இந்த நகரத்தை அழிக்கவும் சத்தமிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் சத்தமிடுவான். 9 அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று நீ சொல்லி, 10 உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, 11 அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன். 13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். 14 பின்பு எரேமியா, யெகோவா தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, எல்லா மக்களையும் பார்த்து: 15 இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினதினால் நான் இந்த நகரத்திற்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதைச் சுற்றியுள்ள பட்டணங்களின்மேலும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.