பஸ்கூரின் கதி முன்னறிவிக்கப்படுகிறது
கி.மு. 609
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், யெகோவாவுடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது, 2 எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான். 3 மறுநாளில் பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார். 4 மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான். 5 இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருட்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் எதிரிகள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள். 6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற அனைவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத் தீர்க்கதரிசனத்திற்கு காதுகொடுத்த உன் நண்பர்கள் அனைவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே இறந்து, அங்கே அடக்கம் செய்யப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான்.
7 யெகோவாவே, என்னை இணங்கச் செய்தீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். 8 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் அழிவு என்றும் சத்தமிட்டுச் சொல்கிறேன்; நான் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை அனுதினமும் எனக்கு நிந்தையும், பரியாசமுமானது. 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது. 10 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். 11 யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும். 12 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன். 13 யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார். 14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. 15 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக. 16 அந்த மனிதன், யெகோவா மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன். 17 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன? 18 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
சல்லூமின் கதியும் யோயாக்கீமின் கதியும் முன்னறிவிக்கப்படுகின்றன
1 யெகோவா சொன்னது: நீ யூதா ராஜாவின் அரண்மனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்: 2 தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய வேலைக்காரரும் இந்த வாசல்களுக்குள் நுழைகிற உம்முடைய மக்களும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள். 4 இந்த வார்த்தையின்படியே நீங்கள் உண்மையாகச் செய்வீர்கள் என்றால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் வேலைக்காரரும் அவன் மக்களுமாக இந்த அரண்மனை வாசல்களின் வழியாக நுழைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 5 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்கள் என்றால் இந்த அரண்மனை அழிந்துபோகும் என்று என் பெயரில் கட்டளையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். 6 யூதா ராஜாவின் அரண்மனையைக் குறித்துக் யெகோவா: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்திரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். 7 அழிப்பவர்களை அவரவர் ஆயுதங்களுடன் நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் விலையுயர்ந்த கேதுருக்களை அவர்கள் வெட்டி, நெருப்பில் போடுவார்கள். 8 அநேகம் மக்கள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அருகில் உள்ளவனை நோக்கி: இந்தப் பெரிய நகரத்திற்கு யெகோவா இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள். 9 அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார். 10 இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை. 11 தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்திற்கு வந்து, ஆட்சிசெய்து, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் மகனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல், 12 தான் கொண்டுபோகப்பட்ட இடத்தில் இறப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார். 13 தனக்கு விசாலமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, ஜன்னல்களைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, தெளிவான சிவப்பு வண்ணம் பூசி, 14 அநீதியினால் தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேலறைகளையும் கட்டி, தன் அந்நியன் செய்யும் வேலைக்குக் கூலிகொடுக்காமல், அவனைச் சும்மா வேலைவாங்குகிறவனுக்கு ஐயோ, 15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார். 17 உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை. 18 ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை. 19 ஒரு கழுதை புதைக்கப்படுகிற விதமாக அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார். 20 லீபனோனின் மேலேறிப் புலம்பு, பாசானில் மிகுந்த சத்தமிடு, அபாரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் வீழ்ந்தார்கள். 21 நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போது நான் உனக்குச் சொன்னேன், நீ கேட்கமாட்டேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். 22 உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய். 23 லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளை பெற்றெடுப்பவளைப்போல வாதையும் உனக்கு வரும்போது, நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாக இருப்பாய்