காலப்பகுதி 6: ரெகொபெயாம் முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை
ரெகொபெயாம் அரியணை ஏறியது முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை.
பகுதி 1: ரெகொபெயாமின் ஆட்சி
யூதாவின் ராஜ்யம்
பத்து கோத்திரங்கள் கிளர்ச்சி செய்கின்றன
கி.மு. 975
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
21 சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.
1 ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான். 2 ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான். 3 அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 4 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள். 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள். 8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து, 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 10 அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும். 11 இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள். 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள். 13 ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களுடைய ஆலோசனையின்படி அவர்களோடு பேசி: 14 என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான். 15 ராஜா, மக்கள் சொன்னதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. 16 ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக:
“தாவீதோடு எங்களுக்குப் பங்கேது?
ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை;
இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு;
இப்போது தாவீதே,
உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்” என்று சொல்லி,
இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான். 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் பொறுப்பாளனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் வேகமாக இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். 19 அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்து பிரிந்து போயிருக்கிறார்கள். 20 யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.
21 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான். 22 தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது: 23 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி: 24 நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவாவுடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
ரெகொபெயாம் யூதாவை ஆளுகிறார் கி.மு. 973
5 ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான். 6 அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும், 7 பெத்சூரும், சோக்கோவும், அதுல்லாமும், 8 காத்தும், மரேஷாவும், சீப்பும், 9 அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், 10 சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி, 11 அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும், 12 யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். 13 இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். 14 லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். 15 அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். 16 அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள். 17 இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.
18 ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான். 19 இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். 20 அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். 21 ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான். 22 ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். 23 அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
12:1 ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
22 யூதா மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள். 23 அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள். 24 தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.