சீஷாக் யூதாவின்மீது படையெடுக்கிறார்

கி.மு. 970

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 12:2–16

2 அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்ததால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்தின் ஆட்சியில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதாயிரம் குதிரைவீரர்களோடும் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்; 3 அவனோடுகூட எகிப்திலிருந்து வந்த லிபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியரான மக்கள் எண்ணமுடியாதவர்களாக இருந்தார்கள். 4 அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான். 5 அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்திற்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழுவதற்கு விட்டுவிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 6 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள். 7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் யெகோவா கண்டபோது, யெகோவாவுடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். 8 ஆனாலும் என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள் என்றார். 9 அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்கேடயங்கள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 10 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற பாதுகாவலருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான். 11 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள். 12 அவன் தன்னைத் தாழ்த்தினதால், யெகோவா அவனை முழுவதும் அழிக்காமல் அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பினது; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் ஒழுங்குள்ளதாயிருந்தது. 13 அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோன் வம்சத்தாளான அவனுடைய தாயின் பெயர் நாகமாள். 14 அவன் யெகோவாவை தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 15 ரெகொபெயாமின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள அனைத்து செயல்களும் செமாயாவின் புத்தகத்திலும், தரிசனம் காண்கிறவனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எல்லா நாட்களும் போர் நடந்துகொண்டிருந்தது. 16 ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 10:1–11:4

1 ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான். 2 ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். 3 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 4 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள். 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள். 8 முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து, 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 10 அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். 11 இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள். 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள். 13 ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான். 14 வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான். 15 ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது. 16 தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி,” இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான். 19 அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் வம்சத்தைவிட்டுக் கலகம்செய்து பிரிந்துபோயிருக்கிறார்கள்.

11:1 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான். 2 தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது: 3 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி: 4 நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.

1 இராஜாக்கள் 14:25–31

25 ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து, 26 யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடகங்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 27 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கல கேடகங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற காவற்காரர்களுடைய தளபதிகளின் கைகளில் ஒப்புவித்தான். 28 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள். 29 ரெகொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 30 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 31 ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாகமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.