பகுதி 5: பஸ்கா ஏற்படுத்தப்படுதல்
கி.மு. 1491
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: 2 “இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக. 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும். 4 ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். 5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். 6 அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, 7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 8 அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும். 9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள். 10 அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள். 11 அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா. 12 அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா. 13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும். 14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும். 15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான். 16 முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம். 17 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும். 18 முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக. 19 ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான். 20 புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல்” என்றார்.