பகுதி 6: பத்து வாதைகளின் முடிவு

ஒன்பதாம் வாதை: மூன்று நாட்கள் இருள்

கி.மு. 1491

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாத்திராகமம் 10:21–27

21 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். 22 மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. 23 மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது. 24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; “நீங்கள் போய்க் யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம்” என்றான். 25 அதற்கு மோசே: “நாங்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும். 26 எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு யெகோவாவுக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது” என்றான். 27 யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான்.

பத்தாம் வாதை: முதற்பிறந்தவர்கள் கொல்லப்படுதல்

முதற்பிறந்தவர்களுக்கு மரண அச்சுறுத்தல்

யாத்திராகமம் 11:1–8

1 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான். 2 இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார். 3 அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.

4 அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன். 5 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி, 6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். 7 ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை. 8 அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

யாத்திராகமம் 10:28–29

28 பார்வோன் அவனை நோக்கி: “என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். 29 அப்பொழுது மோசே: “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன்” என்றான்.

யாத்திராகமம் 11:9–10

9 யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார். 10 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.

பஸ்கா உண்ணப்படுதல்

யாத்திராகமம் 12:21–28

21 அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, 22 ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 23 யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். 24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். 25 யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். 26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், 27 இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். 28 இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

முதற்பிறந்தவர்கள் கொல்லப்படுதல்

யாத்திராகமம் 12:29–30

29 நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார். 30 அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.